சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்ற நிலையில மக்களின் உணர்வுகளை மதிக்காமல் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகளும் அதன் முக்கியஸ்தர்களும் முன்னெடுப்பார்களாயின் சாய்ந்தமருதின் வரலாற்றுத் துரோகிகளாகவே அவர்கள் கருதப்படுவர்.
ஏனெனில், சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் தலைமைகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலையில் வாக்குறுதிகள் உரியவாறு நிறைவேற்றப்படாமையினாலேயே இந்த மக்கள் அரசியல் கட்சிகளை புறந்தள்ளி பள்ளிவாசல் தலைமையின் வழிநடாத்தலுடன் தமது கோரிக்கையை வென்றெடுக்கப் போராடி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆரம்பித்த நாள் தொடக்கம் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்வரை முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட ஊர் சாய்ந்தமருது. அஷ்ரபின் சொந்த ஊரான கல்முனையில் கூட முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பலத்த சவால்கள் இருந்தபோதும் சாய்ந்தமருதில் மிக இலகுவாக அரசியல் செயற்பாடுகளை செய்து வந்தனர். அஷ்ரபின் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ சர்ச்சையால் அவரது பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும் தற்போதைய தலைவர் றஊப் ஹக்கீம் ஆகியோரைக் கொண்டு இயங்கிய முஸ்லிம் காங்கிரஸுக்கு றஊப் ஹக்கீம் ஏக தலைவராக நியமிக்கப்பட்டமை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நடைபெற்ற ஒரு நிகழ்வின்போதே.
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை விடயத்தில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிருவாகம் உட்பட உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்னெடுத்த தரப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்களிடமே தமது கோரிக்கையை அதிகமாக முன்வைத்தனர். இதன் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த பலர் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்குவது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது இம்மக்கள் அதிக வெறுப்பை வெளியிடக் காரணமாகும்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் 2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரப் பணிக்காக கல்முனைக்கு விஜயம் செய்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களைக் கொண்டு பகிரங்கமாக வழங்கப்பட்ட வாக்குறுதியாகும். இந்த வாக்குறுதி சாய்ந்தமருது மக்களிடம் அதிக தாக்கத்தை செலுத்தியது. பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் உதமாகும் என்ற பிரச்சாரங்களும் அப்போதைய காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டன. இந்த வாக்குறுதி சாய்ந்தமருது மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கூட இல்லாமல் செய்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
ஏனெனில், 2015இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிறாஸ் மீராசாஹிப் போட்டியிட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அளிக்கப்பட்ட குறித்த வாக்குறுதியே சிறாஸ் மீராசாஹிப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்தது என்ற பலத்த குற்றச்சாட்டு இன்றும் உள்ளது. ஆனால், மேற்படி வாக்குறுதியை தான் எழுதிக் கொடுத்தே பிரதமர் வாசித்தாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பகிரங்க மேடையொன்றில் தெரிவித்திருந்தமை சாய்ந்தமருது மக்கள் மத்தியில் றஊப் ஹக்கீம் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்தது.
சாய்ந்தமருது மக்களின் உணர்வு ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளித்து சில அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் நடவடிக்கைகளை சாய்ந்தமருதில் செய்யாதிருக்கின்ற நிலையில் சாய்ந்தமருது சார்பான முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மாத்திரம் அரசியல் செய்ய முற்படுவதை இந்தப் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடாகவே மக்கள் நோக்குகின்றனர். தாங்கள் சார்ந்த கட்சிக்காக அரசியல் செய்வது ஜனநாயக உரிமை என்று அவர்கள் கூறிக் கொண்டாலும் சொந்த மண்ணில் பற்றில்லாத பணத்திற்கும் அற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் நபர்களாகவே அவர்களை மக்கள் நோக்குகின்றனர். அது மட்டுமில்லாது சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை இல்லாமல் செய்கின்ற கைங்கரியங்களைச் செய்யும் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இவர்கள் செயற்படுதாகவும் பலத்த விமர்சனங்கள் உள்ளன.
ககட்சி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் எனும் பெயரில் அவர்கள் செய்யும் ஒவ்வொறு செயற்பாடும் வலிந்து வம்புக்கிழுக்கும் நடவடிக்கைகளாகவே பொதுமக்களால் நோக்கப்படுகின்றது. இதன் ஒரு அங்கமாகவே அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரின் வாகனம் சாய்ந்தமருதில் வைத்து தாக்கப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது சுயேற்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரமும் நடந்தேறியது. அவர்கள் கைதாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக போராட்டம் வீரியம் அடைந்ததேயன்றி வலுவிழந்துவிடவில்லை.
சாய்ந்தமருது சார்ந்த முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சாய்ந்தமருது பள்ளி நிருவாகத்தினருடனும் உள்ளுராட்சி மன்ற செயற்பாட்டாளர்களுடனும் முரண்பட வைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட சிலர் முனைகின்றனர் என்ற பேச்சுகள் உள்ளன. சொந்த ஊருக்குள்ளேயே உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்கு எதிரான ஒரு குழு இருப்பதாக சித்தரித்து அதனூடாக உள்ளுராட்சி மன்றம் மலர்வதை தடுக்கும் காய்நகர்த்தல்களை உள்ளுராட்சி மன்றத்திற்கு எதிரான போக்குடையவர்கள் கையாள்கின்றனர் என்பதை அறியாமல் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் செயற்படுகின்றனர் என்று பொதுவாகப் பேசப்படுகின்றது.
உள்ளுராட்சி மன்றம் வழங்கப்பட வேண்டும் என்று கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஊரின் நலனுக்காக ஒற்றுமைப்பட்டுள்ள மக்கள் உள்ளுராட்சி மன்றம் வழங்கப்பட்டால் எதிர்கால தேர்தல்களில் அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு தமது வாக்கினை வழங்குவர். அதில் அவர்கள் முன்னர் ஆதரித்த கட்சிக்கே தமது ஆதரவினை தெரிவிக்குமிடத்து முஸ்லிம் காங்கிரஸுக்கே வழங்க வாய்ப்புள்ளது.
எனவே, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் மிக விரைவில் உதயமாகுவதற்கான சாத்தியபாடுகள் தெரிகின்ற நிலையில் கட்சி முக்கியஸ்தர்கள் அரசியல் காரணங்களுக்காக சொந்த ஊர் மக்களுடனே முட்டிமோதிக் கொள்வது யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமனானதாகும்.
எம்.ஐ.சர்ஜுன்
சாய்ந்தமருது.

