அரபுநாடுகள் சிலவற்றில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது. எனினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எவ்வித ஆதரவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்க முடியாதளவுக்குப் புதிய முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவை ஏற்படுத்தினால் நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்களை சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலில் வணக்கத்துக்குரிய தம்பர அமில தேரர், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, பேராசிரியர் எச்.டபிள்யு. சிறில், கலாநிதி ஜெஹான் பெரேரா, சமன் ரத்னப்பிரிய, சுனில் டி சில்வா,பிலிப் திசாநாயக்க, ராஜா உஸ்வெடிகெய்யாவ, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து கொண்டனர்.