குறுகிய இனவாத ஊடகங்கள் ஒரு நாட்டுக்கு சாபக்கேடானவை! இன்று இந்நாட்டுக்குத் தேவைப்படுவது இன ஐக்கியத்தை வளர்க்க வேண்டிய ஊடகங்களே!
கடந்த 35 வருட பயங்கரவாதச் சூழலினால் அதிகமான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஏறாவுரில், வாழைச்சேனையில், அக்கரைப்பற்றில், அட்டாளைச்சேனையில், பொலன்னறுவையில், மூதூரில், கிண்ணியாவில் பல்வேறு காலகட்டங்களில் முஸ்லிம்பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாகக்கொல்லப்பட்டனர். வடக்கிலிருந்து சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் துரத்தப்பட்டனர்.
தென்னிலங்கையில்கூட பல இடங்களில் முஸ்லிம் மக்கள் சிங்கள கடும்போக்காளர்களினால் பல முறை தாக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் அக்கிரமங்கள் அநியாயங்கள் தலைவிரித்தாடியபோதெல்லாம் நாட்டின் ஊடகங்கள் அவர்களுக்காகப் பரிதாபப்படவில்லை. அநீதியை, அநியாயத்தை, அக்கிரமத்தை எதிர்த்து குரல் எழுப்பவில்லை.
குறிப்பாக தமிழ் ஊடகங்கள் இவைபற்றி போதிய கவனம் செலுத்தி எழுதவில்லை. முஸ்லிம்களும் தமிழைப் பேசுபவர்கள். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களோடு இணைந்து வாழ்பவர்கள். என்றாலும் முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் ஏற்பட்டபோது அவர்களுக்காக இரக்கப்பட பேச தமிழ் ஊடகங்கள் ஒரு போதும் முன்வரவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோதும் தமிழ் ஊடகங்கள் மௌன விரதம்தான் பூண்டிருந்தன. மனிதாபிமானத்தின் பெயராலோ ஊடக தர்மத்தின் அடிப்படையிலோ பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக தமிழ் ஊடகங்கள் பேசவில்லை. முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தட்டிக் கேட்கவோ உலகுக்கு பிரசாரம் செய்யவோ தமிழ் ஊடகங்கள் முன்வரவில்லை. அதனை ஒரு கோட்பாடாகவே தமிழ் ஊடங்கள் பின்பற்றுகின்றன.
கடந்த காலத்தில் முஸ்லிம்களின் விவகாரங்களில் பாரபட்சமாக செயல்பட்டது போலவே அன்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு விவகாரத்திலும் தமிழ் ஊடகங்கள் மிகவும் பாரபட்சம் காட்டுகின்றன. கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்குப் பக்கபலமாக நின்றது போன்று இன்றும் அவ்வாறான் ஒர் நிலையினையே கடைப்பிடிக்கின்றன. இந்நிலையில் இந்த ஊடகங்களை தேசிய ஊடகங்கள் என்றோ பொதுவான ஊடகங்கள் என்றோ ஊடக தர்மத்தை முழுமையாகப் பின்பற்றும் ஊடகங்கள் என்றோ எப்படி கூற முடியும்.
இனவாதமாக, குறுகிய நோக்கத்தில் செயல்படும் இத்தகைய ஊடகங்களால் ஒரு நாட்டுக்கு என்ன பயன்? ஊடகங்கள் இவ்விதம் தொடர்ந்தும் செயல்பட்டால் நாட்டின் இனப்பிரச்சினைஉட்பட எத்தகைய பிரச்சினையுமே தீர்க்கப்படமாட்டாது. நாட்டில் நீதி, நேர்மையான அரச நிர்வாகம் நடைபெறவும் இத்தகைய ஊடகங்கள் வழிசெய்ய மாட்டாது. ஊடகங்கள் பிரச்சினைகளுக்கு இனவாத சாயம் பூசும்போது அவற்றுக்கு தீர்வுகள் எப்படி வரும்? பிரச்சினைகள் பல்கிப்பெருகி நாட்டின் சமாதானம் குலையும். இலங்கையின் இனப்பிரச்சினை சுமார் 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த நீடிப்புகளுக்கு சிங்கள, தமிழ் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள ஊடகங்கள் சிங்கள இனவாதத்தையும் தமிழ் ஊடகங்கள் தமிழ் இனவாதத்தையும் வளர்த்தால் தேசிய சிந்தனை எப்படி ஏற்படும்? தேசிய ரிதியில் பிரச்சினைகள் அணுகப்படுமா? நிச்சயமாக இல்லை!!
இன்று இந்நாட்டுக்குத் தேவைப்படுவது இன ஐக்கியத்தை வளர்க்க வேண்டிய ஊடகங்களே!
பொறுப்பை உணர்ந்து, நீதி நேர்மையாக செயல்படும் ஊடகங்களால்தான் இன ஐக்கியம்வளரும். சமாதானம் ஆட்சி புரியும்!!