Ihshan J.M.I Mohamed
பள்ளிவாயல்களில் இரண்டு வெவ்வேறுபட்ட புனிதமிக்க ஒலிகள் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அவை பற்றி நாம் எந்த அளவு அக்கறை செலுத்துகின்றோம் என்பதில் நீண்டகால ஐயம் என்னுள் இருந்துகொண்டே வருகின்றது.
1 - ஜுமுஆ பிரசங்க ஒலி
2 - அதான் (பாங்கு) ஒலி
#ஜுமுஆ_பிரசங்கம்
பல ஜுமுஆக்கள் நான் சும்மா இருந்துகொண்டு தொழுது மட்டுமே வந்துள்ளேன். கற்றுக்கொள்ளவோ அல்லது அறியாத ஒன்றில் தெளிவு அடையவோ அவை எனக்கு வாய்பளிக்கவில்லை. (தன்னிலை நிலைப்பாடு)
1 - பொறுப்பற்ற பள்ளி நிருவாகம் - காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற தலைப்பு, பேச்சாளர்களை அறிமுகம் செய்யத் தவறியது.
2 - பேச்சாளர்களின் தரம் - தலைப்பை தேர்வு செய்தல் தொடக்கம் அதனை தெளிவாகவும் புரியும்படியும் விபரிக்க ஆளுமை கொண்டிருத்தல்.
3 - முகாமைத்துவம் - நேரம், மொழி, சொற்களின் தரம், மேற்கோள் காட்டப்படும் உதாரணங்களின் தரம் என்பன கவனிக்கப்படுதல்.
4 - மென்மையான நடுநிலை பேச்சு - குறிப்பாக இந்த காரணிகளில் மாற்று கண்ணோட்டத்தில் சமூக நிலைப்பாடு உள்ளதனை காணமுடிகிறது. அதாவது உரத்த குரல், வீறுகொண்ட பேச்சு என்பன தரமான நிலையாக கருதப்படுகின்றது.
உண்மையில் அது பிழையான அணுகுமுறை ஆகும். இதுபற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.
"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக" (அல்குர்ஆன் 16:125) சில ஜுமுஆ மேடைகளை அந்நிய சமூகத்தவர் மொழியறியாத ஒருவர் செவியேற்றால் உண்மையில் அவர் விரண்டு ஓடிவிடுவார் என்ற நிலையிலே பல ஜுமுஆ பிரசாரங்கள் காரசாரமாக நிகழ்த்தப்படுகின்றது.
5 - தகுதியுடையோருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமை - ஜுமுஆ உரை நிகழ்த்த எமது சமூகத்தில் எந்த நிர்ணயம் வரையறை செய்யப்படுகின்றது என்று இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. 7 வருடம் மதரஸா வாழ்க்கை போதுமா இல்லை வேறு ஏதாவது தகுதி வேண்டுமா?
6 - புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்படாமை
7 - பக்தர்களின் மனோநிலை
#அதான்_பாங்கு_ஒலி
பல பள்ளிவாயல்களின் முஅத்தின் நிலை பரிதாபமே. முறையான ஊதியம் தொடக்கம் முறையான கண்ணியம் வரை அவர்களுக்கான உரிமை வழங்கப்படுவதே இல்லை. அது ஒருபுறம் இருக்க பெரும்பாலான பள்ளிவாயல்களில் முஅத்தின் பள்ளிவாயலை சுத்தம் செய்யும் பணிக்கே அமர்த்தப்பட்டு வேலை வாங்கப்படும் துர்பாக்கிய சமூக இழிசெயல் வெளிப்படையாக அரங்கேறுகின்றது.
"முஆவியா (ரலி) அவர்கள்,மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்" (புஹாரி 631) "பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்" (புஹாரி 615)
இன்னும் சில அதான்களை பேசப்போனால் மிகப்பெரும் கவலையளிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. இவ்வாறானவைகள் பற்றி நாம் எப்போது சிந்திக்கப்போகின்றோமோ???