Ads Area

சம்மாந்துறை கல்வி வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 3 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு நேர்ந்த அவலம்.

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மூன்று முஸ்லிம் ஆசிரியைகள் கற்பிக்கும் பாடசாலையொன்றில் நேற்று நடந்த அவலச் சம்பவமே இது!.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில் நாடு முழுவதிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு பரிசோதனை மேற்கொண்ட சம்பவம் குறித்த பாடசாலைக்கும், குறித்த ஆசிரியைகளுக்கும், சமூகத்துக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

படையினரால் ஒவ்வொரு ஆசிரியைகள், மாணவர்களின் பைகள் மற்றும் சுற்றுச் சூழலை பரிசோதனை செய்து பாடசாலையின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் படையினரல்லாத குறிப்பிட்ட சிலரால் குறித்த மூன்று ஆசிரியைகள் மாத்திரம் உடலளவில் பரிசோதனைக்கு உட்பட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

குறித்த மூன்று ஆசிரியைகளும் ஹபாயா அணிந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது விடயத்தின் பின்னர் பாடசாலை வளாகத்தில் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த ஆசிரியைகளை பிற்பட்ட நேரங்களில் எவ்வாறு சிந்திப்பார்கள்? இவர்களிடம் இனிமேல் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் மனோ நிலை எவ்வாறு இருக்கும்?

உண்மையிலேயே, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. காட்டுமிராண்டித்தனமாக ஒரு சில விஷமிகள் செய்த அகோர கொடுமைகளால் முழு முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது நியாயமா?

இவ்விடத்தில் முப்படையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், அவர்கள் சாதுவான முறையில் ஒழுக்கமான நடைமுறையில் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றமை வரவேற்கத்தக்கது.

அவ்வாறிருக்கையில் உள் மனதில் இனவாத கசப்புக்களை வினையாக்கிய சிலர் இவ்வாறு பரிசோதித்து பிரிவினை காட்டுவது நியாயமற்றது. இவர்கள் பாடசாலை பாதுகாப்பிற்காக தனிநபர் பரிசோதனை மேற்கொண்டால் அனைத்து ஆசிரியர்களையும் பரிசோதித்திருக்க வேண்டும், மாறாக குறிப்பிட்ட மூன்று முஸ்லிம் ஆசிரியைகளையும் பரிசோதித்தமை எவ்வகையிலும் நியாயமற்றது.

இவ் அதிகாரம் எந்தவொரு பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்துக்கும் இதுவரையில் அரசாங்கத்தினாலோ அல்லது பொலிஸாரினாலோ வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே மாதிரியான அவலச் சம்பவம் ஒன்று அவிசாவளை தமிழ் பாடசாலை ஒன்றிலும் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thanks - NewsPuls

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe