Ads Area

கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கண்டி உண்ணாவிரத இடத்திற்கு சென்றது அரசியல் தவறுதான்.

Fauzer Mahroof

உங்கள் கரங்களில் படிந்திருக்கும் 
அழுக்கினை முதலில் கழுவுங்கள்!

கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஈஸ்டர் தாக்குதலின் பின், அப்போதிருந்த கிறிஸ்தவ மக்களின் மனக் கொதிப்புக்கு தீனி வார்த்து , முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் போதும் முஸ்லிம்கள் மிக மோசமான பாதிப்பை எதிர் கொண்டிருப்பர்.

அப்படி கிறிஸ்தவ மக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை திரும்பாத, நடைபெறாத காரணத்தால்தான் நீர்கொழும்பில் மீண்டும் கலவரத்தினை தீமூட்டப் பார்த்தனர். அப்போதும் கார்டினல் மிகப் பொறுப்பான பணியை ஆற்றினார்."அதன் பின்பே இனி கிறிஸ்தவ மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் , இனி தாமே களத்தில் இறங்கினால்தான் காரியமாகும் " என்கிற முடிவுக்கு வந்ததன் பின்புதான் மினுவாங்கொட,குருணாகல் பற்றி எரிந்தது.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடாத்திய இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து சிங்கக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஜெனிவா வரை , காவடி எடுத்தது இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமை , ஆன்மீக தலைமை ,புலம்பெயர் அமைப்புகள் . ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கூட்டுப் படுகொலை செய்த, இந்த தார்மீகமற்ற அன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தவர்கள் முதலில் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள், முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து கொண்டு இது தவறு என சொன்னவர்கள் , இந்த மக்களின் கொலைகளை ஆதரித்த ‘கும்பல்’ வெட்கித் தலைகுனியும் வரை இன்னும் இன்னும் சொல்லுங்கள் .

கார்டினல் கண்டி உண்ணாவிரத இடத்திற்கு சென்றது அரசியல் தவறுதான்.அதன் மீதான தார்மீக ரீதியான கேள்விகள் இலங்கை கிறிஸ்தவ சமூகத்திடமிருந்து உள்ளார்ந்து முதலில் வருதல் வேண்டும், வணபிதா நந்தன மனதுங்க(கண்டி) , மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினை சேர்ந்த பலர் இதனை பகிரங்கமாக கண்டிக்கின்றனர், அது மிக முக்கியமானது.

இலங்கை சிங்கள பௌத்த இன , மத அரசியல் கட்டுமாணத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் இலக்குத்தான். சிங்கள இனவாத அமைப்புகள் இலங்கையில் கிறிஸ்தவ மக்களுக்குமெதிரான பிரச்சாரத்தினை கொண்டிருக்கின்றனர். ஈஸ்தர் தாக்குதலின் பின் கிறிஸ்தவ மக்களை தந்திரோபாயமாக நேச சக்தியாக்கி, முஸ்லிம்களை தனி எதிரியாக்கி உள்ளனர். இந்த விடயத்தினை தான் கிறிஸ்தவ மக்களை நோக்கி நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

இதை விடுத்து நேற்று கார்டினல் மல்கம் அவர்களை புகழ்ந்தும் இன்று இகழ்வதும் வெறும் மேலோட்டமான உணர்ச்சியின் பாற்பட்டதே. கார்டினல் கண்டி உண்ணாவிரத இடத்திற்கு சென்றது குறித்த முஸ்லிம் உணர்ச்சி கருத்துக்கள் கறாரான அரசியல் விமர்சனங்கள் என்றால் அது ஒரு சல்லிக் காசுக்கும் பெறுமதி அற்றது, ஒரு வகையில் அது முஸ்லிம் மக்களின் ஆதங்கம் என்றால் சற்று பொருட்படுத்தத்தக்கது.


முஸ்லிம் சமூக அரசியல் அரங்கிலிருந்து எழக்கூடிய அரசியல் , சமூக விமர்சனங்கள் ஒரு போதும் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை கொண்டவையாக இனியும் இருந்து விட முடியாது என்பதற்காகவே இந்த இடத்தில் இதனை நாம் சுட்டிக் காட்டுகிறோம். தமக்கு என்று ஒரு விமர்சனப் பார்வையும், வெளியில் இருந்து நடப்பதற்கு மற்றுமொரு விமர்சனப் பார்வையையும் கொண்டிருப்பது மிக அபத்தமானது.

“அறிவுடையோருக்கு இது அத்தாட்சியாகும்”.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe