கூட்டு இராஜினாமா ரணிலை பாதுகாக்கும் திட்டம் என்பதை அதாவுல்லாஹ்வும்,அவரது கொள்கைப்பரப்பும் அணியும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. இவர்கள் மீண்டும் பதவிகளை எடுப்பார்கள் என்பதை அப்போதே அவர்கள் ஆணித்தரமாக கூறியும் வைத்துள்ளார்கள். ஆனால் இப்போது மீள் அமைச்சு பதவி பெறல் எனும் நிலை உருவாகி கருக்கட்டி பிரசவத்தினை நோக்கி காத்திருக்கிறது. அப்படி ஒன்றும் நடக்காது என்று றிஷாத்தும்,ஹரீஸும் வாதிட்டாலும் ஹலீமும்,கபீரும் வாய்ப்பிருக்கிறது என அறிக்கை விட வாய்க்குள்ளால் குபீரென சிரிக்கிறது குதிரை. முகப்புத்தகத்தில் தியாகியாக்கிய போராளிகள் துரோகிப்பட்டத்தை இரும்பில் செதுக்க ஆரம்பித்திருப்பது காலம் செய்த பொல்லாத கோலம். காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.
அவர் இவ்வாறு எழுதிய அடுத்த நாள் வடக்கில் சோதனைக் கெடுபிடிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்தன. குறிப்பாக ஆனையிறவில் பயணிகளை ஏற்றி இறக்கும் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் வாகனங்களைப் பதியும் நடைமுறையும் பெருமளவிற்கு நிறுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் அவசரகால சட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் ஒருவித ராணுவ மயமாதல் நிகழ்வது குறித்து தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.ஆனால் கிழக்கின் முஸ்லிம் எம்.பிக்களுக்கு அதுபற்றி பேச நேரமிருக்கவில்லை.
பயணிகள் தமது வாகனங்களை விட்டு இறங்கி ஆவணங்களை காட்டிப் பதிய வேண்டும். அப்படியென்றால் ஜிகாத் அச்சம் அதிகம் உண்டு என்று படைத்தரப்பு கருதுகின்றதா? இது தொடர்பாக அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?அவர்களில் பெரும்பாலானவர்கள் கம்பெரெலியத் திட்டத்தின்கீழ் எந்த வீதியைத் திருத்தலாம் என்று தேடித் திரிகிறார்களா?
ஒருபுறம் கூட்டமைப்பு கம்பெரெலியத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பங்காளியாக காணப்படுகிறது. இன்னொருபுறம் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்துப் பேசி வருகிறது. கம்பெரெலியத் திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கான பெயர்ப் பலகைகளில் ஒரு வாசகம் காணப்படுகிறது. அது ‘அபிவிருத்தி யுத்தம்’ என்று இருக்கிறது.
ஒரே நேரத்தில் கூட்டமைப்பு அபிவிருத்திக்கான யுத்தத்தையும் ராணுவ மயமாதலுக்கு எதிரான யுத்தத்தையும் முன்னெடுக்கின்றதா? நடைமுறையில் அவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு யுத்தங்களை முன்னெடுக்க இயலுமா? என்பதை வாக்காளர்களாக நாமே நன்றாக சிந்திக்க வேண்டும்.
ஏனெனில் இந்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமையக் கூடும் இந்த ஆண்டில் சிலவேளைகளில் அரசு தலைவருக்கான தேர்தல் மட்டும்தான் நடக்குமானால் நிச்சயமாக அடுத்த ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாகவே அமையும்.
அவ்வாண்டில் ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடத்த வேண்டி இருக்கும். அப்படி ஒர் எதிர்பார்ப்போடுதான் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் அபிவிருத்திப்பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விசாரணை நடக்கும் இந்த காலகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் இமேஜ் குறிப்பிடத்தக்க அளவுக்கு சரிந்தது. ஆனால் ஒப்பீட்டளவில் ரணிலை விடவும் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இமேஜை தாக்குதல் விளைவுகள் மேலும் நொறுக்கியிருக்கின்றன. என்பதே எதார்த்தம்
குறிப்பாக தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் சிறிசேனவை அதிகபட்சம் குற்றவாளியாகக் காட்டும் ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இத் தெரிவுக்குழுவின் மூலம் ரணில் நன்கு திட்டமிட்டு சிறிசேனவுக்கு ஒரு பொறி வைத்தார். அது ஒரு பொறி என்று கண்டதும் சிறிசேன தெரிவுக்குழுவில் புலனாய்வு அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார். ஆனால் நாடாளுமன்றத்தில் சிறப்புத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
இதன்மூலம் மறுபடியும் நாடாளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையிலான ஒரு மோதல் நிலையை அவர் உருவாக்கினார்.கடந்த ஒக்டோபர் ஆட்சிக் குழப்பத்தில் ஏற்பட்டதைப் போல நிறைவேற்று அதிகாரமா அல்லது சட்டவாக்க அதிகாரமா என்ற மோதல் மறுபடியும் தீவிரமடைந்திருக்கிறது.
பத்தொன்பதாவது திருத்தச்சட்டம் மறுபடியும் விவாதப்பொருளாகியிருக்கிறது.
உண்மையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஆட்சி குழப்பத்தோடு ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணை காலாவதியாகிவிட்டது. தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அதிகாரத்தைப் பெற்ற மைத்திரி,ரணில் தலைமையிலான நல்ல ஆட்சி (நல்லாட்சி) தமிழ்,முஸ்லிம் மக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முடக்க முயற்சிக்கிறார். 2015 இல் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒரு பகுதி சிங்கள மக்களும் தனக்கு வழங்கிய ஆணைக்கு மாறாக மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகிறார்.
ஒக்டோபர் ஆட்சி குழப்பத்தோடு இப்போது இருக்கும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை தீர்ந்து போய்விட்டது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு புதிய தேர்தலை நடத்தி ஒரு புதிய மக்கள் ஆணையைப் பெற வேண்டி இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு தேர்தலை உடனடிக்கு நடத்த ரணிலும் தயாரில்லை. அவரை ஆதரிக்கும் மேற்கு நாடுகளும் அதை விரும்பவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இப்படி சிந்திப்பவர்களின் திட்டங்களைக் குழப்பி விட்டன. எனினும் அத்தாக்குதல்களின் விளைவுகளின் விளைவுகள் சிறிசேனவுக்கு பாதகமான திருப்பத்தை அடைந்து வருகின்றன. அவை ரணிலை விடவும் சிறிசேனவை அதிகம் அம்பலப்படுத்தி வருகின்றன. இது எதிர்காலத்தில் சிறிசேன் தேர்தலில் நிற்கக் கூடிய வாய்ப்புக்களை மேலும் குறைக்கக்கூடியது.
பொறுமையாகக் காத்திருந்தால் அடுத்த தேர்தலில் சாதகமான நிலைமைகள் மேலும் மேலும் கனியக் கூடும் என்று ரணில் விக்கிரமசிங்க நம்பும் அளவிற்கு சிறிசேன மேலும் மேலும் அம்பலப்படுத்தப்படுகிறார்.
அடுத்த அரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்தால் அதில் யாராவது ஒரு ராஜபக்சதான் வெல்லக்கூடும் என்ற நிலைமைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் வளர்ச்சி அடைந்தன. அத்தாக்குதல்களால் அதிக லாபம் அடைந்தது ராஜபக்ச அணிதான். அத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் தீர்மானகரமானவை.இருந்தாலும் பணமும் பாயும் சட்டியும் முட்டியுமே இவர்களின் வாக்குகள் யாருக்கு என்பதை தீர்மானிக்கும்.
தமிழ் மக்களின் வாக்குகள் வழமை போல் இம்முறையும் ராஜபக்சேவுக்கு எதிராகத்தான் விழும். வாக்களிப்பு வீதம் குறைந்தால் தவிர தேர்தல்கள் சுமுகமான ஒரு சூழலில் நடக்குமாக இருந்தால் தமிழ் வாக்குகள் அதிகபட்சம் ராஜபக்சவுக்கு எதிராகவே விழும். அதை மாற்றத் தம்மால் முடியாது என்பது ராஜபக்சக்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
ஆனால் முஸ்லிம் வாக்குகள் தளம்பக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த அரசுத் தலைவருக்கான தேர்தலின் போது முஸ்லீம் வாக்குகள் ரணிலுக்கே விழுந்தன.ஆனால் இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. முஸ்லிங்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
2015 இல் அரசுத் தலைவருக்கான தேர்தலின்போது தனது விசுவாசத்தை முதலில் இடம் மாற்றிக் கொண்டவர் ரிசாத் பதியுதீன். எனவே இம்முறையும் அரசுத் தலைவருக்கான தேர்தலில் முஸ்லிம் தலைவர்கள் ஓர் இறுக்கமான திரளாகி யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
ஒரு பலவீனமான தலைமையை ஆதரித்து தொடர்ந்தும் அடி வாங்குவதை விடவும் ஒரு பலமான தலைமையை ஆதரித்து அத் தலைமைக்குத் தமது விசுவாசத்தை காட்டுவதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ஒரு தற்காப்பு நோக்கு நிலையிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் சிந்திப்பார்களாக இருந்தால் அதாவது வெல்லமுடியாத ஒர் இனவாதத்தோடு மோதுவதை விடவும் அதனிடம் சரணடைவது என்று முடிவெடுத்தால் அது ராஜபக்சக்களுக்கு சாதகமானது. இருந்தாலும் அதாவுல்லாஹ்வின் சாமார்த்திய அரசியல் காய் நகர்த்தல்கள் இங்கு ஆராயப்படவேண்டியது.
மாறாக கடும்போக்கு இனவாதிகளுக்கு எதிராக தாராளத் தன்மை மிக்க இனவாதிகளை ஆதரிப்பது என்ற ஒரு முடிவுக்கு முஸ்லிம் தலைமைகள் போகுமாக இருந்தால் அது ராஜபக்சக்களுக்கு பாதகமானது. அப்படியொரு நிலைமையை எதிர்பார்த்தால் ராஜபக்சக்கள் பெருமளவுக்குச் சிங்கள வாக்குகளால் மட்டும் வெல்லும் ஒரு தேர்தல் வியூகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும்.இருந்தாலும் சூடுகண்ட பூனைகளாகி இருக்கும் முஸ்லிங்கள் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஹுதா உமர்.