(காரைதீவு நிருபர் சகா)
முற்பிறப்பு மறுபிறப்பு பற்றி எமக்குத் தெரியாது. ஆனால் இருக்கின்ற இந்தப் பிறப்பில் ஏனைய மதங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் மனிதனாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இராணுவத்தின் 24வது படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தொழிலதிபர் அல்ஹாஜ்.எம்.எஸ்.முபாறக் தலைமையில் நோன்புதுறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் (2)மாலை நடைபெற்றது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க விசேடஅதிரடிப்படையின் அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதி பொலிஸ்அத்தியட்சகர் ஆர்.எ.கே. ரத்னாயக்க உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு முன்னாள் உலமாசபைத்தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஏ.முஜீப் (நளீமி) தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பிரபல சன்மார்க்க சொற்பொழிவாளர் அஷ் செய்க் எம்.எம்.எம். முனீர் முனவ்வர் (நளீமி ) சிங்களத்தில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
அங்கு கட்டளைத்தளபதி மகிந்தமுதலிகே மேலும் உரையாற்றியதாவது:
முழு உலகமும் பேசப்பட்ட சாய்ந்தமருது மண்ணில் இருந்து பேசுவதில் பெருமையடைகின்றேன். சஹ்ரானின் தம்பி குடும்பம் கொலையுண்டதால் சாய்ந்தமருது உலகில் பிரபலமானது. அச்சம்பவத்தால் நானும் பிரபலமானேன்.
சஹ்ரான் என்ற தனிநபர் செய்த காரியத்தால் இன்று அவர் சார்ந்த முழு முஸ்லிம் சமுகமும் வேதனையிலுள்ளது. சந்தேகத்தில் கைதுசெய்யப்படுபவர்களும் முஸ்லிம்களாகவிருப்பதால் பயத்துடனும் உள்ளனர்.
கடந்த 10வருடங்களாக இந்தநாட்டில் மக்கள் எவ்வளவு சந்தோசத்துடன் நிம்மதியாக வாழ்ந்துவந்திருந்தார்கள். அதனை அந்த சஹ்ரான் தொலைக்கவைத்துள்ளார். அவர் எங்குசென்றாரோ தெரியாது.
ஆனால் இலங்கையில் வாழும் இப்போது இருக்கக்கூடியவர்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். சமயத்தலைவர்கள் அதற்கு வழிகாட்டவேண்டும். சகல சமயங்களும் மனிதன் வாழ்வாங்குவாழ நல்லவழிகளையே காட்டுகின்றன.
இரத்தத்தில் தமிழ் இரத்தம் முஸ்லிம் இரத்தம் சிங்கள இரத்தம் என்று பார்ப்பதில்லை. எல்லா இரத்தமும் சிவப்புநிறம்தான். கடந்தசம்பவத்தின்போது அம்பாறையில் எமது இராணுவம் 300பேர் இரத்ததானம் செய்தனர்.
எனவே சகல இனமக்களும் இன மத மொழி பேதம் கடந்து ஒற்றுமையாக இலங்கையன் என்ற அடிப்படையில் வாழவேண்டும்.
தொடர்ந்து இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வதால் 5கிலோ எடை கூடியுள்ளேன். தலைவர் முபாறக் அடுத்தமுறையும் அழைப்பதாகக்கூறியுள்ளார். கட்டாயம்வருவேன். என்றார்.
அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க உரையாற்றுகையில்;
இஸ்லாம்கூறிய 5கடமைகளுள் ஒன்றான இந்த ரமழான் நோன்புகாலத்தில் பல படிப்பினைகளை கற்கிறோம்.ஏழைகளுக்கு உதவுவதும் மார்க்க கடமையாகவுள்ளது.அது நல்லது. மற்றவருடைய வேதனையை ஒருகணம் எமது வேதனையாக நினைத்துப்பார்த்தால் உலகில் பிரச்சினைகளே எழாது. இலங்கை முழுஉலகுக்கும் முன்னுதாரணமாக திகழ நாம் ஒன்றுபடவேண்டும் என்றார்.
கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துகலசங்கரத்ன தேரர் உரையாற்றுகையில்:
30வருட யுத்தத்திலிருந்து மீண்டு 10வருடங்கள் நிம்மதியாகவிருந்தோம். அதனை சஹ்ரான் அழித்துவிட்டார். எமது சமுகங்கள் சமயத்தலைவர்களை மதிப்பதில்லை. ஆனால் அரசயில்வாதிகளை மதிக்கிறார்கள். இன்றையநிலைக்கு அதுதான் காரணம். மதத்தலைவர்கள் மதிக்கப்படவேண்டும்.
நாம் நமக்குள்ளே பிரித்துபிரித்து சுவர் கட்டாமல் அனைவருக்கும் பொதுவான உறவுப்பாலத்தைக் கட்டவேண்டும்.ஆம் சமாதானத்திற்கான பாலத்தை கட்டவேண்டும். என்றார்.