Ads Area

சிங்கள மக்களின் மனங்களில் பரவியுள்ள இனவாத தீயை எவ்வாறு அணைப்பது ? இது சாத்தியப்படுமா ?

சிங்கள மக்களின் மனங்களில் பரவியுள்ள இனவாத தீயை எவ்வாறு அணைப்பது ? இது சாத்தியப்படுமா ?

எமது முஸ்லிம் தலைவர்கள் சக்திமிக்க சிங்கள தரப்பினர்களை சந்தித்து தங்களது ராஜினாவுக்கான காரணங்களையும், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளையும் எடுத்துரைத்து வருகின்றார்கள்.

அந்தவகையில் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் சென்ற குழுவினர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து உரையாடியதுடன், இந்த பிரச்சினை பற்றி சிங்கள மக்களை தெளிவு படுத்தும்படியும் வலியுறுத்தியதோடு பௌத்த மகாசங்கத்தினர்களையும் சந்தித்து பேசி உள்ளார்கள்.

இது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். ஆனாலும் இது ஓர் சம்பிரதாய சந்திப்புக்களே தவிர, இதனால் ஒன்றும் நடந்துவிட போவதில்லை. ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த பிரச்சினைகள் பற்றி நன்கு தெரிந்தவர்கள்.

இனவாத பௌத்த தேரர்களின் தலைமையில் சிங்கள இளைஞ்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டபோது, அதனை தடுத்து நிறுத்துவதற்காக இந்த மகா சங்கத்தினர்களோ அல்லது பௌத்த பீடங்களோ முன்வரவில்லை.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் உற்பட ஜனாதிபதி, பிரதமர், அல்லது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற கோத்தபாய போன்ற பலமிக்க சிங்கள தலைவர்கள் எவரும் முஸ்லிம்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

அவ்வாறு முஸ்லிம்களை காப்பாற்ற முற்படுகின்றபோது அது எதிர்காலத்தில் தங்களது வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்ற அச்சமே தவிர, நீதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற என்னமோ, சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமோ அவர்களிடம் இல்லை.

மாறாக இனவாத தீயை மூட்டிவிட்டு அதில் குளிர் காய்ந்துகொண்டு அடுத்த தேர்தலை வெற்றிகொள்வது எவ்வாறு என்ற சிந்தனை மட்டுமே இந்த சிங்கள தலைவர்களிடம் காணப்படுகின்றது.

இனவாதிகளின் பிரச்சாரத்தின் பயனாக முஸ்லிம் மக்கள் மீது அப்பாவி சிங்களவர்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களையும், சந்தேகங்களையும் இல்லாமல் செய்வதற்கு முஸ்லிம் தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக பிரச்சாரங்களை முன்னெடுப்பது சாத்தியமற்ற விடயமாகும்.
அவ்வாறு பிரச்சாரத்தினை மேற்கொண்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் சிங்கள மக்கள் இல்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தின் வளர்ச்சி கடந்த காலங்களைவிட அதி உச்சநிலையில் உள்ளது. நாங்கள் எதனை கூறினாலும் அதனை தவறான கண்ணோட்டத்தோடுதான் பார்க்கின்றார்கள்.

அவ்வாறானால் சிங்கள மக்கள் மத்தியில் எங்களது செய்திகளை எத்திவைப்பது எவ்வாறு ? இனவாதிகளின் போலி பிரச்சராத்தினை முறியடித்து சிங்கள மக்களின் மனங்களில் உண்மையை பதியச்செய்வது எப்படி என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

சக்திமிக்க சிங்கள தலைவர்கள் முன்வராத நிலையிலும், சிங்கள தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் தொடர்ந்து இனவாத கருத்துக்களை பரப்பி வருவதனாலும்

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தின் மூலம் சிங்கள மொழியில் தொலைகாட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் மூலமாக அம்மக்களை கவரச் செய்து அதன்மூலமாக எமது நியாயங்களையும், உண்மைகளையும் தெளிவுபடுத்த வேண்டும்.

யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப் புலிகள் தங்களது நியாயத்தினை சிங்கள மக்களுக்கு எத்திவைக்கும் நோக்கோடு சிங்கள வானொலியை நடாத்தி வந்தார்கள். அதனை சிங்கள மக்கள் தவறாது செவிமடுத்து வந்தார்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

எது எப்படி இருப்பினும் இன்று சிங்கள மக்களின் மனங்களில் ஆழ ஊடுருவியுள்ள இனவாத தீயை இலகுவில் அணைத்துவிட முடியாது. அதற்கு சிங்கள அரசியல் தலைவர்களும், மகாசங்கத்தினர்களும் முன்வரவேண்டும். வருவார்களா என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe