எங்கள் வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நோயாளிகளின் சுகாதாரத்தையும் நாங்களே பாதுகாக்க வேண்டும் : வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான் !!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து எமது வைத்தியசாலை ஊழியர்களும், வைத்தியர்களும் அச்சத்தில் இருந்தமையால் பாதுகாப்பு நலன்கருதி இலங்கை பாதுகாப்பு படையின் ஆலோசனையின் பேரில் வைத்தியசாலை பார்வையாளர் நேரத்தில் ஒரு கட்டுக்கோப்பான நிலையை கடைபிடித்துவருகிறோம் என ஞாற்று கிழமை அத்துமீறி சென்று வைத்திசாலையில் அட்டகாசம் செய்தவர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான் பேசும் போது தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வைத்தியசாலை என்பது உயிருடன் நேரடியாக உறவுகொள்ளும் ஒரு இடம். தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கும் இடமென்பதால் இங்கு அதிகமான சுகாதார நடைமுறைகள் உள்ளது. எங்களுடைய வைத்தியசாலையின் தரமான மற்றும் துரிதமான சேவையை அறிந்து நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். அதனால் நாங்கள் எங்களுடைய வைத்தியசாலையை சிறந்த முறையில் அதற்க்கு தயாராக வைத்திருக்கிறோம்.
பொலித்தீன் பாவனை மற்றும் உணவுக்கழிவுகளால் வைத்தியசாலை பல சிக்கல்களை சந்திப்பதனால் நவீன சமையலறையை கொண்ட ஒரு உணவு தயாரிக்கும் நிலையத்தை நிறுவியுள்ளோம். சர்வதேச தரம் வாய்ந்த ஐந்து நட்சத்திர உணவகங்களின் உணவுகளை தயாரிப்பது போன்று போசணை நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை நாங்கள் தயாரித்து வழங்குகிறோம். இந்த உணவு சமைப்பது முதல் பங்கிடுவது வரை பல படிமுறைகளிலும் பல உத்தியோகத்தர்களினால் பரிசோதனை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு மட்டுமில்லாது அவர்களுடன் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் அவர்களின் உறவுகளுக்கும் வழங்கிவருகிறோம்.
அந்தந்த விடுதி தாதிய உத்தியோகத்தர்களினால் உணவுகள் வழங்கப்படுவதனால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெரும் நோயாளிகளின் சுகாதாரம் போசணை என்பவற்றில் நாங்கள் கரிசனை செலுத்த முடிகிறது.
ஊடகவியலாளர்களுடன் நல்ல உறவை பேணிவரும் என்னிடம் கடந்த ஞாற்று கிழமை வைத்தியசாலைக்கு அனுமதியில்லாமல் வந்து நிர்வாக செயற்பாட்டை சீர்குழைத்தவர்கள் வந்து பேசி பிரச்சினைகளை விசாரித்து ஒரு தெளிவை பெற்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.- என்றார்.
( நூருல் ஹுதா உமர் )