ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட முடிவை மீறி அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்ற போது அக்கட்சியின் பிரதி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனையில் கூட்டம் ஒன்றை நடாத்தினார்.
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கு முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சமுமான எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மக்களுடனான சந்திப்பு நேற்று (29) இரவு கல்முனை ஆஸாத் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனான சந்திப்பு, எல்லை நிர்ணய குழுவுடனான சந்திப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு மற்றும் அமைச்சு பொறுப்போற்க்காமல் விட்டதற்கான விளக்கம் என்பன பற்றி விளக்கிக் கூறினார்.
மேலும் சமகால அரசியல் அதாவது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு தரும் அழுத்தம் தொடர்பிலும் சபைக்கு எடுத்துக் கூறினார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரதேச செயலகம் தொடர்பில் இறுதித் தீர்வுக்கு வருதல், திகன, மினிவாங்கொட , குருநாகல் பிரதேசங்களில் இனவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கல், சமூகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் பட்சத்தில் மாத்திரமே அமைச்சுப் பதவிகளை ஏற்பது என்ற தீர்மானத்தையும் சபைக்கு தெரிவித்தார்.
இதன்போது கல்முனை பிரதேச செயலக எல்லை நிர்ணயம் தொடர்பில் கல்முனை மக்களின் ஏகோபித்த முடிவின் பிராகாரமே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விரிவாக எடுத்துக் கூறினார்.
நேற்று முன்தினம் மருதமுனை மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை பெற்று கொடுக்காமல் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
(நூருள் ஹுதா உமர்)