Ads Area

இந்த அரசில் எல்லாவற்றுக்கும் போராட்டமே-விரைவில் காடேர தயாராகிறது யானை!

(பாறுக் ஷிஹான்)

இந்த அரசின் எல்லா நடவடிக்கையும் மக்களின் போராட்டத்திலேயே ஆரம்பித்து போராட்டத்தில் தான் முடிகிறது. இந்த அரசில் நிம்மதியாக வாழ்ந்த நாட்களை விட மக்கள் போராடிய நாட்களே அதிகம். இந்த அரசு மூட்டை முடிச்சிக்களை கட்டிக்கொண்டு மீண்டும் சரணாலயத்தில் உறங்கும் காலம் கனிந்துவருகிறது என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவாகிய சப்றாஸ் மன்சூர் கௌரவிப்பு விழா சனிக்கிழமை (27) மாலை 8 மணியளவில் கல்முனை பிரதான வீதி நகர மண்டபத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த காலங்களில் இருந்த அரசுகள் பட்டதாரிகளுக்கு உள்வாரிஇ வெளிவாரி என எதையும் கவனத்தில் கொள்ளாது தொழில்வாய்ப்புக்களை அள்ளி வழங்கியது. கடந்த மஹிந்த அரசும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்கி சாதனை படைத்தது. ஆனால் இந்த அரசில் பல தலையிடிகள் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. விரைவில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்போவதாக ஒரு புதிய நாடகத்திற்க்கு கதை எழுதுகிறார்கள்.

வெளிவாரி பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி போராடுவதையும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதையும் சமீப நாட்களாக இந்த நாட்டில் காணலாம். படிப்பதுதான் கஷ்டம் என்றால் அதை விட கஷ்டம் இந்த நாட்டில் தொழில் பெறுவது என்றாகிவிட்டது.

கடந்த அரசில் வெளிநாடுகளில் இருந்து இந்த நாட்டுக்கு அவசியமான எத்தனையோ சாமான்களை இறக்குமதி செய்திருக்கிறோம். ஆனால் இந்த அரசில் குப்பைகளை இறக்குமதி செய்கிறார்கள். இன்னும் சில மாதங்கள் இந்த அரசாங்கம் இலங்கையை ஆட்சி செய்தால் இலங்கையே குப்பைத்தொட்டியாக மாறிவிடும்.

புத்தளம் மக்களின் போராட்டம் இன்னும் தணியாமல் இருக்கிறது. இவர்கள் வெளிநாட்டு குப்பைகளை அள்ளிவந்து இலங்கையை சீரழிக்கிறார்கள். இவர்களை விரைவில் இந்த அதிகார ஆசனங்களில் இருந்து மக்கள் ஒன்றுபட்டு வெளியேற்ற வேண்டும்.

இந்த அரசை நிறுவுவதில் 100 சத விகித பங்களிப்பை வழங்கிய கல்முனையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது அதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கணக்கிலும் எடுக்கிறார் இல்லை.

இந்த போராட்டத்தில் சமூக அக்கறையுடன் போராடுபவர்களையும் அவர் எள்ளிநகையாடுகிறார். அவரின் கூஜா தூக்கிகளாக இந்த சமூகத்தை வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு தலைமை தங்குபவர்கள் இறைவனுக்கு பயந்து மக்களின் பிரச்சினைக்காக பேசும் மக்களின் குரல்களாக ஒலிக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் இவ்வரவேற்பு விழாவில் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் உட்பட தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் உள்ளுராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe