வெளிவாரிப் பட்டதாரிகள் 10ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டோருக்கு செயற்றிட்ட அலுவலகர்களாக தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் காந்தி பூங்காவில் பட்டதாரிகளால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொண்டையன்கேணி ஆர்கழி விளையாட்டு கழகத்தில் கம்பரெலிய திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு மக்கள் பாவனைக்கு (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “உள்வாரிப் பட்டதாரிகளுக்கு கடந்த காலத்தில் தொழில்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியேறிய உள்வாரிப் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
ஆனால் வெளிவாரிப் பட்டதாரிகளை புறக்கணித்தது பிழை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன். ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவந்த போது நான் உள்வாரி, வெளிவாரி என்ற பேதம் இல்லாமல் சகலருக்கும் தொழில்வழங்க வேண்டும் என்றும், இவ்வாறு புறக்கணிப்பு கடந்த காலத்தில் இடம்பெறவில்லை எனவும் கூறினேன்.
உண்மையில் உள்வாரி, வெளிவாரி என்ற பேதங்களை ஏற்படுத்தியவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற முக்கியமான தலைவர் என்று அறிய முடிந்தது.
தற்போது 16,500இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்படவுள்ளது. அதேபோன்று 800 வெளிவாரிப் பட்டதாரிகளுக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
பதினான்கு நாட்களுக்குள் உள்வாரிப் பட்டதாரிகள் கடமையை பொறுப்பேற்காவிடின் அந்த வெற்றிடத்திற்குப் பதிலாக வெளிவாரி பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள்.
அத்தோடு இன்னும் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் செயற்றிட்ட அலுவலகர் என்ற நியமனத்தில் பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட வெளிவாரி பட்டாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.