10% முஸ்லிம்கள் வாழும் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டில் நம் முன்னோர்கள் செய்த பங்களிப்பு, ஷரீயா சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் 1951 யில் இலங்கையில் நமக்கென உருவானது.
தற்போது நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் இந்தச் சட்டத்தை மேலும் வலுவாக்கும் முயற்சியில் நாம் இறங்குவதா, இல்லை, மாறாக தம் சுய நலன்களுக்காக நாமே அதனை வீழ்த்துவதா?
மார்க்கத்தை கற்றரிந்த உலமாக்கள், புத்திஜீவிகள், அறிஞர்கள், போன்றோரின் கருத்துக்கள் அனைத்தும் முடக்கிவிடப்பட்டு, அரை குறை புரிதலுடன் முரண்பாடான கருத்துக்களை பரப்பும் சிலருடன் தான் இந்நாட்டின் இன வாத, பிரித்தாளும் கொள்கையை கொண்ட ஊடகங்களும் கை கோர்த்துள்ளனர்.
நமது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமானது ஷரீயா சட்டத்தை அடிப்படையாக கொண்டது. ஷரியா என்பது புனித குர் ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் அடிப்படையில் நான்கு முக்கியமான இமாம்களான ஷாபி, ஹனபி, ஹம்பல், மாலிக் ஆகியவர்களால் தொகுத்து உருவாக்கப்பட்டது. இதனை மாற்றும் அளவிற்கு இந்த இமாம்களுக்கு நிகரான தகுதியுடைய அறிஞர்கள் நம் மத்தியில் யார் இருக்குறார்கள்?
இந்த நவீன “சீர்திருத்தவாதிகள்” தங்களது அரை குறை புரிந்து கொள்ளலால், யானையைப் பார்த்த குருடர்களின் கதை போன்று, ஷரீயாவை மாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடிய ஒரு வெறும் சட்டமாக கருதுகிறார்கள். மாறாக, ஒரு தனி நபர் தன் வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஒரு வழி முறை இது, என்பதை இந்த நவீன “சீ” னாவாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான பெரும் இமாம்களால் நெறிப்படுத்தப்பட்டு, காலம் காலமாக எம் சமுதாயத்தை, நெறிப்படுத்தி வரும் ஒரு வாழ்க்கை வழி முறையில் மாற்றம் கொண்டு வரும் படி கோரி எங்களது நவீன “ சீர்திருத்தவாதிகள்” உடன் இணைந்திருக்கும் பேரினவாத பெண்களுக்கு இது பற்றிப் பேச என்ன தகுதி இருக்கின்றது என நான் கேட்க விரும்புகிறேன்.
இறுதியாக, நமது சீர்திருத்தவாதிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்:
ஏற்கனவே நமது உரிமைகள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு போகும் நிலையில், புதிய உரிமைகளுக்காக போராடுவதை விட இருக்கின்ற உரிமைகளை விட்டுக் கொடுப்பது ஆபத்தான ஒன்றாகும்.
உங்களது இந்த “மாற்றம் தேவை” கோரிக்கையின் விளைவால், முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனியான சட்டம் ஏன் தேவை? ஒரு நாடு:ஒரு சட்டம் கொள்கையை அறிமுகப்படுத்தக் கோரி எழும் கோஷங்கள் இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே, எதிர்கால அபாயங்களை கருத்தில் கொண்டு, அல்லாஹ்வை பயந்து, நம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வோமாக.
Maryam Naleemudeen
Deen & Associates
Solicitor ( Australia)
Attorney at Law ( Sri Lanka)