Ads Area

மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி: முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி பகிரங்க குற்றச்சாட்டு.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ஏமாற்றி வருகிறது. மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி அவர் இனவாதமாக செயற்படுகிறார். இதனை எமது உலமா கட்சி பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறது என முஸ்லீம் உலமா கட்சி தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் உலமா கட்சி ஞாயிற்றுக்கிழமை (4) மாலை நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2005ஆம் ஆண்டு பின்னர் ஆட்சிபீடமேறிய மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். நல்லாட்சியை கொண்டு வந்த ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஏனைய கட்சிகள் இதேவேளை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு குந்தகம் செய்தே வருகின்றன. இது அண்மைக் கால செயற்பாடுகளில் இருந்து தெரியவருகிறது.

இதனால் நாங்கள் பொது ஜன பெரமுன கட்சியுடன் இணைய மிக முக்கிய காரணங்களாக அமைகின்றது. முஸ்லிம்களின் பாதுகாப்பு, கல்முனை விவகாரம் , முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களாக முஸ்லிம்களை நியமிக்கப்பட வேண்டும் மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்த விடயங்களை பொது ஜன பெரமுனவிடம் கோரிக்கையாக முன்வைத்தோம். அவர்கள் அதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து முஸ்லிம் உலமா கட்சி தற்போது பொது ஜன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்களது உலமா கட்சியை கிடைத்த அங்கீகாரமாகவும் வெற்றியாகவுமே பார்க்கின்றோம். இன்றைய நிலையில் மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடிய கட்சியாக சிங்கள மக்கள் மத்தியிலும் சரி சிறுபான்மை மக்கள் மத்தியில் பொது ஜன பெரமுன காணப்படுகிறது. இந்த பெருபான்மை பலமுள்ள கட்சியுடன் நாங்கள் இணைந்ததை பெருமையாகவே பார்க்கின்றோம்.

நான்கரை வருடங்களுக்கு மேலாக கட்சிகள் அனைத்தும் இந்த ஐக்கிய தேசிய கட்சியின் நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் இந்த சமூகத்திற்கு சாதித்திருக்கிறார்கள் என்றால் இல்லை என்றே பதில். இவற்றுக்கெல்லாம் பாடம் புகட்டவே நாங்கள் பொது ஜன பெரமுன உடன் இணைந்துள்ளோம். அவர்கள் தவறு செய்தாலும் நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.

இன்று கல்முனை பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறி உள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் நினைத்திருந்தால் தீர்த்திருக்க முடியும். குறிப்பாக ஹரீஸ் இராஜாங்க அமைச்சராக இருக்கும்போது இவற்றுக்கான தீர்வினை பெற்றிருக்கலாம். அங்கு அவர் தனது சுயலாப அரசியலுக்காக கல்முனையை வைத்து அரசியல் செய்யமுனைகிறார்.

கல்முனை விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏன் இன்னும் பேச்சுவார்த்தைமுடிக்கவில்லை. மாகாண சபையில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து தான் ஆட்சி செய்தார்கள் என்றும் பாராளுமன்றத்தில் ஒன்றாக இருக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஏன் பேசி தீர்க்கமான முடிவுவை எட்டவில்லை . முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ஏமாற்றி வருகிறது.

பொது ஜன பெரமுன கட்சியை இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மை மக்களிடம் சிலர் இனவாத கட்சியாக சித்தரிக்க முனைகின்றனர். வரலாற்றில் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற கட்சிகளாக சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தான். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் தமிழர்கள் பெரும்பாலும் சூறையாடப்பட்டார்கள்.அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா திட்டத்தை கொண்டு வந்து அம்பாறை மாவட்டத்தில் சூறையாடியவர்கள் யார் ? தமிழ் முஸ்லிம் கலவரத்தை தூண்டியவர்கள் யார்? ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தேறின.

1994ஆம் ஆண்டு சந்திரிகா தலைமையிலான ஆட்சி காலத்தில் தான் முஸ்லிம்கள் ஓரளவு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தனர். அதன் பின்பு 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடம் ஏறிய பின் மூதூரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விடப்பட்டன. யார் இனவாதி என்று நாம் சிந்திக்க வேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் இனவாதியா? யுத்தத்தை வைத்துக்கொண்டு இனங்களிடையே மோதலை ஏற்படுத்தியவர் இனவாதியா? சிலர் கூறுகின்றனர் பொதுஜன பெரமுனவின் பக்கம் இனவாதிகள் இருக்கின்றனர் என்று இனவாதிகள் எல்லா பக்கம் இருக்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் சம்பிக்க ரணவக்க யார் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரியவரா? சம்பிக்க ரணவக்க மிகப்பெரிய இனவாதி. முதல் மகிந்தவுடன் இருந்துகொண்டு இனவாதம் பேசினார். இப்போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன வாதம் பேசுகிறார்.

பொதுஜன பெரமுனவில் இனவாதிகள் குறைவு பொதுஜன கட்சியில் சேர்ந்து கூட்டணிக் கட்சிகளில் உள்ள உதய கம்மன்பில விமல் வீரவன்ச போன்றவர்கள் இன வாதிகளாக இருக்கின்றனர். இதை நாம் மறுப்பதற்கில்லை. மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி. அவர் இனவாதமாக செயற்படுகிறார். இதனை எமது உலமா கட்சி பகிரங்கமாக வலியுறுத்தி வருகிறது. அவர் பொதுஜன பெரமுன கட்சியல்ல, ஐக்கிய தேசிய கட்சியுடன் பங்காளியாக இருக்கின்றவர். இவ்வாறு எல்லா பக்கமும் இனவாதிகள் இருக்கிறார்கள்.

ஆனால் எங்களுடைய அணுகுமுறை தான் முக்கியம். எங்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்தி இனவாதிகளை ஒன்றுமில்லாத செய்து செய்துவிட வேண்டும். மேலும் இறந்தவர்களும் எழுந்து வந்து இந்த நல்லாட்சிக்கு வாக்களித்தனர். ஆகவே இவர்கள் என்ன செய்தார்கள் சிந்திக்க வேண்டும்.

எனவே தான் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எமது கட்சி ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஆட்சியை தீர்மானிக்க கூடிய மிகப்பெரும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது என குறிப்பிட்டார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe