ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர்,தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க அழைக்குமாறு ஹனீபா மதனி சபாநாயகரிடம் வேண்டுகோள்!!!
(றிசாத் ஏ காதர்)
தேசிய ஒருமைப்பாட்டுக்கான முஸ்லிம் பேரவையின் தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான அஷ்ஷேஹ் ஹனீபா மதனி சபாநாயகருக்கு விடுத்துள்ள வேண்டுகோள் கடிதத்திலேயே குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாட்சியமளிக்க பணிக்குமாறு கோரியுள்ளார்.
குறித்த கடிதத்தில்-
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகளின் நோக்கம் என்ன? இத்தாக்குதலின் பின்னணியில் இருந்து இதனை இயக்கிய தீய சக்திகள் எவை? அவை உள்நாட்டிலா?, அல்லது வெளிநாட்டிலா? இருந்து இயங்குகின்றன என்பவற்றை அறிந்து அறிக்கையிடவும்.
இத்தாக்குதல் நடைபெறுவதனை தடுக்கக் கடமைப்பட்டயாரேனும் ஒர் அதிகாரியோ, அரசியல் முக்கியஸ்தர்களோ இதனை தடுத்து நிறுத்தத் தவறி இருக்கின்றனரா? என்பதை ஆராய்ந்து திடப்படுத்திக்கொள்ளவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு அதனை ஊடகங்களுடாக மக்களுக்கும் தாங்கள் தெரியப்படுத்தி வருவதை பாராட்டாமல் இருக்கமுடியாது.
பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும் வெறுக்கின்ற, சமாதான சக வாழ்வையும் ஜனநாயக விழுமியங்களை நேசிக்கின்ற,மக்களின் மனங்களில் இத்தீர்வுக்குழு விவகாரம் ஒருவித நம்பிக்கையையும், புத்தூக்க மனோபாவத்தையும் ஏற்படுத்தி வருகின்றதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வகையில் இத்தெரிவுக்குழுவை ஏற்படுத்துவதில் பாரிய பங்களிப்புகளைச் செய்த நாடாளுமன்ற சபாநாயகராகிய தங்களுக்கு இந்த நாட்டு மக்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
30வருட கால யுத்தம் முடிவடைந்து நிம்மதிப் பெருமூச்சுகளுடன் சமாதானக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவ்வாறான மனிதாபிமானமற்ற மிலேச்சததனமான குரூர தாக்குதலை நடத்துவதற்கு சிந்தனையற்ற சஹ்ரான் தலைமையிலான இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு மறைகரமாக இருந்து தொழிற்பட்ட அந்த தீய சக்தி யாது? அவர்களின் அடிப்படை நோக்கம் அரசைப் பலவீனப்படுத்துவதா? அல்லது பெரும் இனக்கலவரங்களை ஏற்படுத்தி அரசை நிலைகுலைய வைப்பதா? என்பவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இத் தெரிவுக் குழுவின் முன்னுள்ள மிகப் பிரதானமான கடமைகளில் ஒன்று என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற நாள் தொடக்கம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை அவர்கள் இதனையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பதனை அவரது உரைகளிலிருந்தும் ஊடக அறிக்கைகள் மூலமாகவும் காணுகின்றோம்.
இத்தாக்குதல் பற்றி பகிரங்கமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசிவருகின்ற இதன் சூத்திரதாரிகள் யார் என்பதனை தான் அறிந்துவைத்திருப்பதாகவும் அவர்களுக்கு அரசு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிரையே மாய்த்துவிடுவேன் எனப் பகிரங்கமாகக் கூறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இந்த நாட்டின் சகவாழ்வுக்கு வேட்டுவைக்க முயற்சித்த ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அத்துரலிய ரத்ன தேரரையும், நாடளுமன்றத்தின் உள்ளும், வெளியிலுமிருந்து இத்தாக்குதல் பற்றி மிக அதிகமாகவே ஆக்ரோஷமாக பேசிவந்தவரும் இத்தாக்குதலுடன் முஸ்லிம்கள் தொடர்புபட்டிருப்பதனால் அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்றும்,தேர்தல்களில் கூட எமக்கு இந்த முஸ்லிம்களின் வாக்குத் தேவையில்லை என்றும் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்து வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச அவர்களையும் இத்தேர்வுக் குழு முன் சாட்சியம் வழங்க அழைக்கப்படுதல் வேண்டும் என இவ் விடயங்களை கூர்ந்து நோக்குகின்ற நாட்டுப்பற்றாளர்களும், புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுவது போன்று நாமும் தங்களை பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இவ்விருவர்களின் சாட்சியங்கள் மூலம் இத்தாக்குதல் தொடர்பாக புதைந்து
போயிருக்கின்ற உண்மைகள் பல வெளிச்சத்துக்கு வருவதுடன் தெரிவுக் குழுவின் விசாரணைகளிலும் கண்டிப்பாக ஒரு திருப்புமுனை ஏற்படும் என நம்புகின்றோம்.தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் வெற்றிபெற பிரார்த்திக்கின்றோம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.