பாறுக் ஷிஹான் -
கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் உண்ணாவிரத்தை தொடர்வதாக கூறியதனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தற்போது புலி சாயம் பூசிய கருத்துக்கள் வெளியாவதாக கருத்து வெளியிடும் முன்னாள் அமைச்சர் ஹரீஸ் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் அதனால் தான் ஹரீஸ் புலம்பி திரிவதாக உண்ணாவிரதம் மேற்கொண்ட தமிழர் முற்போக்கு முண்ணனி அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பிலுள்ள அவரது வீட்டில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் முற்போக்கு முண்ணனி அமைப்பின் தலைவருமான சதாசிவம் வியாளேந்திரன் தலைமையில் (18) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
முப்பது வருடகாலமாக தமிழ் தேசிய தலைவர்களுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். எமக்கும் சந்தர்ப்பத்தை தாருங்கள் உண்ணாவிரதம் இருந்த எங்களை பௌத்த தலைமைகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது வாக்குறுதிகளை அமையவே நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்.
கல்முனைத் தொகுதி முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹரிஸ் என்பவர் நான் படித்த பாடசாலையிலே அவரும் படித்திருந்தார். அவர் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. கல்முனை நகரம் முஸ்லீம்களின் சொத்து எனக்கூறி கல்முனையின் வரலாறு தெரியாமல் புலம்புகின்றார்.
இலங்கை சுதந்திரமடைந்த நிலையில் இருந்து கல்முனை நகரம் முஸ்ஸீம் மக்களின் சொத்து என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கல்முனையைச் சேர்ந்தவர்கள் யார் அமைச்சர்களாக இருந்தார் என்பது உலகுக்கே தெரியாத ஒன்றாகும்.
கல்முனை வடிவமைத்தவர்கள் என்று சொல்பவர்கள் அவர்களுடைய சொந்த நிதியில் வடிவ அமைக்கவில்லை இவ்வாறு சொல்லித் திரிபவர்கள் தோட்டம், சொத்துகளை விற்று இந்த கல்முனை நகரத்தை அமைக்கவில்லை.
ஒவ்வொரு சாதாரண குடிமகனின் வரிப் பணத்திலிருந்துதான் இந்த கல்முனை நகரம் அமையப்பெற்றது .
புலிகளின் ஆயுதமுனையில்தான் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது என்று காலாகாலமாக ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து பதவிகளை பெறுகின்ற நீங்கள் இது சட்டவிரோதமானது என அவர்களுக்கு சுட்டிக்காட்டி இந்த கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை இல்லாமல் செய்து வருகின்ற விடயம் ஒரு மன வேதனைத் தருகிறது.
அத்துடன் திருமணத் தொடர்பு கலாச்சார தொடர்பு கொண்ட சாய்ந்தமருது முஸ்லிம்களுடன் கல்முனை வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறுள்ள நிலையில் கல்முனையில் வாழும் தமிழர்களுக்கு எந்த வகையில் நியாயமான தீர்வினைப் கொடுப்பார்கள் என்பதுதான் இப்போதுள்ள எழுகின்ற கேள்வியாகும் என குறிப்பிட்டார்.