கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து முப்பத்து ஐந்து முறை பகிரப்பட்டுள்ளது; ஒரு வாரத்தில் முதல்முறையாக தனது தலைமுடியை சீவுவதாகவும், பல் துலக்குவதாகவும், அது மிகுந்த வலியை தருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மன அழுத்தம் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல" என அதில் குறிப்பிட்டுள்ளார். "மன அழுத்தம் கெட்ட பழக்கங்களை உருவாக்கும், கண்ணில் கண்ணீர் வற்றும் வரை அது அழ வைக்கும், கண் இமைகள் இமைக்க மறந்து கண்களில் எரிச்சல் வரும் வரை கூரையை உற்று நோக்க வைக்கும்." "உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் உங்கள் குடும்பத்தையும் அழ வைக்கும்; தனித்தும், கவனம் சிதறியவாறும் இருப்பதால் நீங்கள் உங்கள் குடும்பத்தை விரும்பவில்லை என்று அவர்களை உணர வைக்கும்". "மன அழுத்தம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும், ஒரு வெறுமையை நீங்கள் உணருவீர்கள்".
ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மன அழுத்தத்தின் உண்மை நிலையை காட்டாமல் அதனை கற்பனை கலந்து காட்டுவதால் தான் இந்த பதிவை வெளியிட்டதாக ஜார்ஜியாவில் தனது ஆண் நண்பர் மற்றும் தாத்தா பாட்டியுடன் வாழும் கேட்டி, பிபிசியின் நியூஸ் பீட்டிடம் இதனை தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக மன அழுத்தம் குறித்து பேசுவதற்கு சமூகத்தில் யாரும் தயங்குவதில்லை, பலர் அதனை பற்றி பரவலாக பேசி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
நீங்கள் தாழ்வாக உணர்ந்தால் உங்கள் துணையிடம் நீங்கள் உதவி கோரலாம். நீங்கள் தனியாக இல்லை. உங்களை புரிந்து கொள்ளும் ஒருவர் நிச்சயமாக இருப்பார். நீங்கள் அவர்களை அணுகினால் உங்களுக்கு உதவ நிச்சயமாக அவர்கள் முன்வருவார்கள்.
சில சமயங்கள் நீங்கள் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்ய இயலும் ஆனால் சில சமயங்களில் அது முடியாது ஆனால் எது எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் விரும்ப வேண்டும் என கூறுகிறார் கேட்டி.
மன அழுத்தம் - அறிகுறிஎன்ன?
அனைவராலும் அனைத்து நாட்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் நீங்கள் வாரக் கணக்காக சோகமாக உணர்கீறிர்கள் அது, வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
மன அழுத்தம் என்பது அறிகுறிகளை கொண்ட உடல் நல குறைவு. அதை நாம் ஒதுக்கிவிட முடியாது. மன அழுத்தம் உள்ளவர்கள் எதிர்மறையான சிந்தனைகளை எதிர்கொள்வர்.
அது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும் என்றாலும் பொதுவான அறிகுறிகள் சில உள்ளன:
01. பல நாட்களாக நீடிக்கும் சோகம், நம்பிக்கையில்லா தன்மை, உற்சாகமற்ற நிலை
02. ஒரு நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்ந்த தருணங்களில் தற்போது அவ்வாறு உணராமல் இருப்பது.
03. அன்றாடம் செய்யக்கூடிய சிறு வேலைகளுக்கும் கூட உந்துதல் இல்லாமல் இருப்பது
04. தன்னம்பிக்கையில்லாமல் இருப்பது, தன்னை தானே தாழ்வாக நினைத்து கொள்வது
05. பதட்டமான நிலை
06. குறைந்த ஞாபக சக்தி, கவனக் குறைபாடு, தூக்கமின்மை
07. பசி எடுப்பதில் மாற்றம், எடை குறைவு அல்லது அதிகரிப்பு.
08. நண்பர்கள், குடும்பம், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பணியில் ஆர்வம் குறைவது.
மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிகப்படியான மன சோர்வு அல்லது விரும்பதகாத அனுபவங்களின் விளைவாக மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் பாரம்பரியமாக வரலாம் அல்லது இயல்பாக அதனால் பாதிக்கப்படலாம்.
எதுவாக இருந்தாலும் நான்கில் ஒருவர், மன நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவே நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம் யாருக்கும் ஏற்படலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி என்ன வயதினராக இருந்தாலும் சரி.
இதற்கான சிகிச்சை என்ன?
ஒருவருக்கு மன அழுத்தம் இருந்தால் அவர்கள் அதிலிருந்து விடுப்பட சிகிச்சைகள் அளிக்கப்படும்; அதன்மூலம் அவர்கள் விரைவாக அதிலிருந்து வெளிவரக்கூடும்.
நீங்கள் உதவி பெற பல வழிகள் உள்ளன;
01. நீங்கள் அதிகம் நம்பும் ஒருவரிடம் மனம்விட்டு பேசுங்கள், முடிந்தால் உங்கள் குடும்பத்தினருடன் பேசுங்கள்.
02. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், முக்கியமாக கீரை மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.
03. உடற்பயிற்சி செய்யுங்கள்.
04. குடி, மது, சிகரெட், போதை பொருள் போன்ற பழக்கத்தை விட்டொழியுங்கள்.
05. நண்பர்களிடம் பேசுங்கள், அவர்கள் உங்களை அலோசகர்கள் அல்லது வல்லுநர்களை அணுகுமாறு அறிவுறுத்துவார்கள்.
06. துறை சார்ந்த வல்லுநர்கள் உங்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை அறிவுறுத்துவார்கள்.
உங்கள் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ அல்லது மருத்துவர்களிடமோ இதை பற்றி பேச தயங்காதீர்கள் இதில் அவமானமாக உணர ஒன்றுமில்லை. மன அழுத்தம் ஏற்படுவது உங்கள் குற்றம் அல்ல. எனவே பிறரிடம் உதவி கோருவதால் நீங்கள் பலவீனமாக கருதப்படமாட்டீர்கள். அது உங்கள் வாழ்க்கை மீது நீங்கள் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது.
Via - BBC Tamil