Ads Area

பகிடிவதையால் வதை செய்யப்படும் பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை.

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்த வகையில் பல்கலைக்கழகங்களுக்கு 2016-2017ஆம் ஆண்டுக்கென மொத்தமாக 30,662 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கூறியபடி பார்த்தால், இந்த ஆண்டு அனுமதி பெற்ற மாணவர்களில் சுமார் 3000 பேர், பகிடிவதை காரணமாக படிப்பை இடைநிறுத்தியுள்ளமை அதிர்ச்சி அளித்துள்ளது.

பகிடிவதையை பல்கலைக்கழகங்களில் ஒழிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டு, சுற்றறிக்கைகளும் விடப்பட்டுள்ளபோதும், அதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே சம்பவங்களும், புள்ளி விவரங்களும் உணர்த்துகின்றன.

இந்த நிலையில் பகிடிவதையைச் சகித்துக் கொள்ள முடியாமல், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இலங்கையில் பதிவாகியுள்ளமை வேதனைக்குரியது.

கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை ஒழிப்பதற்கென்றே இலங்கையில் '1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 946ஆம் இலக்க சுற்றறிக்கையிலும் பகிடிவதைக்கு எதிராக சரத்துகள் உள்ளன. இந்த சரத்துக்களில், பகிடிவதையில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி பகிடிவதையில் ஈடுபடுகின்றவர்களின் பல்கலைக்கழக அனுமதியைக் கூட ரத்துச் செய்ய முடியும் என்பதோடு இவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படுவோர் அவர்களின் வாழ்நாளில் எந்தப் பல்கலைக்கழகங்களிலும் படிப்பைத் தொடர முடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டத்தின்படி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும், பகிடிவதையினால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்துக்கு 2017ஆம் ஆண்டு அனுமதி பெற்றுச்சென்ற கெவின் பீரிஸ் மாணவன் பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதைக்கு உள்ளானதால், தனது படிப்பை தொடராமல் கைவிட்டார்.

இந்த நிலையில், அவரை பகிடிவதைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் மாணவர்கள் ஆறு பேருக்கு எதிராக பல்கலைக்ககழக நிர்வாகம் ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டது. அதற்கிணங்க, நான்கு மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி நிரந்தரமாக ரத்துச் செய்யப்பட்டதோடு மேலும் இரண்டு மாணவர்களின் அனுமதி இரண்டு வருடங்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மிகவும் குறைவடைந்த போதிலும், முற்றாக ஒழியவில்லை என, அந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கினால், தண்டனை பெற்ற மாணவர்கள் உடனடியாகவே, மனித உரிமை ஆணைக்குழுவிடம் சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்கின்ற நிலை காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, "பகிடிவதைக்குள்ளாகும் அநேக மாணவர்கள், அது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிடுவதில்லை" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில், மாணவிகள் மீது, ஆண் மாணவர்கள் சேற்று நீரை வாரி இறைக்கும் காணொளி பதிவொன்று, சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் தமது கோபங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்திருந்தனர்.

எனினும் சமூகத்தில் உள்ளவர்களில் சிலர், தண்டனை வழங்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நாசமாக்கி விட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலையை அவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை எனவும் குறித்த அதிகாரி கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe