நூருல் ஹுதா உமர் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வாக்குறுதியின் படி இன்னும் சில நாட்களில் சாய்ந்தமருத்துக்கான தனியான சபை மலர இருக்கும் தருவாயில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற பிரேரணை காரைதீவு பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று காலை காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்ற போதே இப்பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றிபெற்றது.
இந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதிதவிசாளர் ஏ.எம்.ஜஹிர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த காந்திபன், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முஸ்தபா ஜலீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ரணீஸ், ஆகியோர் சொந்த வேலைகள் நிமிர்த்தம் சபையை விட்டு வெளியேறியிருந்தனர். அப்துல் ரசாக் முஹம்மட் பஸ்மீர் அவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் மட்டுமே முஸ்லிம் உறுப்பினர்களாக சபையில் இருந்தனர்.

