Ads Area

போஸ்டர் ஒட்டியமை தொடர்பில் விமல் வீரவன்சவை கடுமையாக எச்சரித்த கோத்தபாய!

நாடு முழுவதும் தனது புகைப்படத்தை பயன்படுத்தி விமல் வீரன்சவின் கட்சி போஸ்டர் ஒட்டியமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூழலுக்கு நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நடத்ததுவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், வீரவன்சவின் செயலினால் அதிருப்தி அடைந்த கோத்தபாய, கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இரவு இந்த போஸ்டர்கள் நாடு முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் விமல் வீரவன்சவினால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டமை தொடர்பில் பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான மக்களின் கருத்து தொடர்பில் தேர்தல் பிரச்சார கண்கானிப்பு பிரிவு கோத்தபாயவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

உடனடியாக வீரவன்சவை தொடர்புகொண்ட கோத்தபாய “என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? இது சரியா? நான் சுற்று சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் நடத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி சில மணித்தியாலங்களுக்குள் அதனை மீறி விட்டீர்கள். இதற்கு என்ன பதில்? நான் தான் வேட்பாளர். அதனை தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளேன். பட்டாசு போட்டார்கள். பாற்சோறு சமைத்தார்கள். நான் தான் வேட்பாளர் என அனைவருக்கும் தெரியும். உங்களுடைய போஸ்டர்கள் மீண்டும் எங்களுக்கு வேண்டாம். இதன் பாதிப்பு எனக்கு தான் என்பது உங்களுக்கு தெரியாது. மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள். இரண்டு வார்த்தை பேசும் நபர் என என்னை மக்கள் நினைப்பார்கள். நான் பொதுஜன பெரமுன வேட்பாளர். தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளர் அல்ல. உங்கள் கட்சி பிரச்சாரத்திற்கு எனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்” என கோத்தபாய கூறியுள்ளார்.

விமல் வீரவன்ச கோத்தபாயவை சமாதானம் செய்ய முயற்சித்த போது, எனக்கு ஒன்றும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe