புதுடெல்லி:
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, அரசு வேலை மற்றும் 50 லட்சம் ரூபாயை 2 வாரங்களுக்குள் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது டாஹோட் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானோ (அப்போது வயது 19) என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் 10-க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ.5 லட்சத்தை ஏற்க மறுத்த பில்கிஸ் பானோ சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.
இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் வழங்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் அரசு வேலை மற்றும் வீடு வழங்கவும் இவ்வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாத நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னர் ஆஜரான குஜராத் அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த தீர்ப்பு தொடர்பாக சீராய்வு செய்ய வேண்டும் என கோரினார்.
இந்த வழக்கில் ஆதாரங்களை சீர்குலைத்ததற்காக 5 போலீஸ் அதிகாரிகளுக்கும் 2 மருத்துவ அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.