தகவல் - காரைதீவு சகா.
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தி வருகின்றது. இவ்வருடத்துக்கான தேசிய மட்ட கண்டுபிடிப்புப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ரீதியான இப் போட்டிக்கு மாகாண மட்டப் போட்டிகளிலிருந்து கண்டுபிடிப்பாளர்களை தெரிவு செய்து தேசிய மட்டப் போட்டிகள் நடைபெறும். தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெறும் ஆக்கங்களிலிருந்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புக்களை சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
மேலும் அவர்களது கண்டுபிடிப்புக்களை வணிக மயப்படுத்துவதற்குரிய மானியங்கள் மற்றும் உதவிகளை வழங்குதலே இப் போட்டியின் பிரதான நோக்கமாகும்.