Ads Area

இளம் யுவதி பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை: பங்களாதேசில் 16 பேரிற்கு மரண தண்டனை.

அதிபர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்திய பங்களாதேஸ் மாணவியை உயிருடன் எரித்துக்கொண்ட 16 பேரிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பெனியில் கடந்த ஏப்பிரல் மாதம் 19 வயது நுஸ்ரட் ஜகான் ரபி உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது.

தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்துகின்றார் என மாணவி குற்றம்சாட்டிய அதிபர் மற்றும் நுஸ்ரத்தின் சக மாணவிகள் உட்பட 16 பேரிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

பாடசாலை அதிபர் சிறையிலிருந்தபடி கொலைக்கு உத்தரவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்பிரல் மாதம் மாணவி நுஸ்ரட் கொலை செய்யப்பட்டமை பங்களாதேசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மாணவியின் கொலைக்கு நீதி வழங்கவேண்டும் என கோரி போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதியிலேயே தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பங்களாதேஸ் வரலாற்றில் மிக துரிதமாக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகளின் போது நுஸ்ரத்தினை மௌனமாக்குவதற்கு சகமாணவிகள் உட்பட சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் திட்டம் தீட்டியமை தெரியவந்துள்ளது.

இவர்களிற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர், அவர்கள் நுஸ்ரத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல்களை பரப்பியுள்ளனர்.

நுஸ்ரத்திற்கு என்ன நடந்தது

பாடசாலை அதிபர் தன்னிடம் முறைகேடான விதத்தில் நடந்துகொண்டார் என நுஸ்ரத் முறைப்பாடு செய்து சில நாட்களின் பின்னர் அவரை பாடசாலையி;ன் மேல்தளத்திற்கு அழைத்த சிலர் நுஸ்ரத்தை சுற்றிவளைத்து முறைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

அவர் அதற்கு மறுத்ததை தொடர்ந்து அவரை உயிருடன் எரிக்க முயன்றுள்ளனர்.

எனினும் அவர் காயங்களுடன் தப்பிச்சென்று தனக்கு நடந்ததை தனது சகோதரனிற்கு தெரியப்படுத்தியுள்ளார், அவர் அதனை கையடக்கதொலைபேசியில் பதிவு செய்துள்ளார். இதன் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe