Ads Area

நாவிதன்வெளியில் போற்றத்தகு நாட்டுப்புற வைத்தியர் இத்ரீஸ் அவர்கள்.

மருவிவரும் நாட்டுப்புற வைத்தியத் தொண்டு.

அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் விவசாயத்திலும் முன்னேறிவரும் பிரதேசம்தான் நாவிதன்வெளி பிரதேசம். யுத்தத்தின் கோரப்பிடியில் பல்வேறு சேதங்களை தனது மார்பில் வாங்கிக் கொண்டாலும் தற்போது அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுவரும் இப்பிரதேசம் நாட்டுப்புற வைத்தியத்திலும் சளைத்ததல்ல. அத்துறையில் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவர்தான் படத்தில் காணப்படும் இத்ரீஸ் அங்கிள்.!

இதனை எழுதுவதற்கான பிரதான காரணம்

01.ஒரு மனிதன் வாழும் போதே அவனை வாழ்த்தி விடவேண்டும்.
02. அவனிடத்தில் உள்ள கலைகளை நல்ல நோக்கத்திற்காக அழிய விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.

இப்பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரசஉத்தியோகத்தராக இருப்பவர்தான் எங்களால் அழைக்கப்படும் இத்ரீஸ் அங்கிள் என்பவர். அரசு உத்தியோகத்தராக தனது கடமையை சிறப்பாக செய்தது மட்டுமல்லாது சுனாமி காலத்தில் கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களிலுள்ள எம் சமூகத்திற்கு பாரிய சேவையை வழங்கியவர்.!

இவரது அரசு தொழிலுக்கு மேலதிகமாக ஒரு சமூக சேவையாக தன்னை நம்பி வருவோர்க்கு வைத்திய சேவையை வழங்குவதில் இவர் வல்லவர். தனது பிரதேசத்தில் காணப்படும் மூலிகைகளை கொண்டும் நாட்டுப்புற வைத்திய துறையில் தான் பெற்ற அறிவைக் கொண்டும் விஷத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் உடலில் ஏற்படும் ஆறாத காயங்கள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வை இலகுவாகவும், இலவசமாகவும் வழங்குவதில் இவரை மிகைத்த வர்கள் இப்பிரதேசத்தில் யாருமில்லைதான் என்று கூற வேண்டும்.!

இவரை நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள ஆறாம் கிராம ஜும்மா பள்ளிவாசலில் ஒவ்வொரு தொழுகை நேரத்தில் சந்தித்தாலும் அண்மையில் இவரது வீட்டிற்கு சென்று எனது உறவினர் ஒருவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய அனுபவம் ஏற்பட்டது. அந்த உறவினர் சொன்னார் "எனது காலில் ஏற்பட்ட காயங்களுக்காக இரண்டு தரம் மருத்துவர்களிடம் சென்றும் சதைகளை வெட்டி நீக்கினார்கள் ஒழிய காயம் ஆறவில்லை என்றதும் அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் இது ஒரு சின்னப் பிரச்சினை என்று " உண்மையில் இரண்டு வாரத்துக்கு பின் அந்த உறவினரை சந்தித்தபோது அவரது காயம் முற்றுமுழுதாக ஆறி விட்டதை அறியமுடிந்தது.!

ஐந்து ரூபாய் மருத்துவரை திரைப்படத்தில் பாராட்டும் நாம் இலவசமாக தன்னை நம்பி வருவோர்க்கு மத பேதம் பாராமல் தனது சேவையை ஆற்றிக்கொண்டிருக்கும் இவரைப் போன்றோரை பாராமலே விட்டு விடுகின்றோம். இவரைப் போன்ற ஒருவரே நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட #வீரத்திடல் கிராமத்தில் வாழ்ந்து மரணித்து போனார். அவரோடு அந்தக் கலையும் அப்பகுதியில் மரணித்துப் போனது கவலையே.!

நான் அறிந்த வகையில் எனது சிறு பிராயத்திலேயே இத்ரீஸ் அங்கிள் தனது மனைவியை இழந்தது மட்டுமல்லாமல் விசேட தேவையுடைய ஒரு பிள்ளையுடன் தனது மூத்த மகனை பொறியியல் துறையிலும் தனது கடைசி மகளை மருத்துவத் துறையிலும் ஆளாக்கியதுடன் குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் தனது பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தது மட்டுமல்ல தனது வாழ்க்கையையும் இச் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது உண்மையில் உள்ளம் பூரிப்படைகின்றது.!

பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக, பிரதேசத்திற்கு நல்ல அதிகாரியாக இருந்தது மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நல்ல தொண்டனாகவும் இருக்கும் இத்ரீஸ் அங்கிள் "ஆபத்துடனும் அவசரத்துடனும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது பலதடவை தான் சமைத்த உணவு கருகிய சம்பங்கள் அதிகம்" என்று சொல்லும்போது உள்ளம் துயரத்தால் கனத்ததையும் மறக்கமுடியாது.!

மறுபுறத்தில் இவரோடு இவரது மருத்து அறிவும் எமது பிரதேசத்தை விட்டு செல்லப் போகின்றது என்பதை நினைக்கும்போது கவலையளிக்கின்றது. இறைவன் இவரது ஆயுளை எமது சமூகத்திற்காக நீட்டி தரவேண்டும். மேலும் இத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இவரை அணுகி சமூகத்துக்குத் தொண்டு செய்யும் நோக்கத்துடன் இந்த நாட்டுப்புற மருத்துவத் துறையை பாதுகாக்க முன்வருவார்களானால் உண்மையில் மகிழ்ச்சியே.!

பைஸாத் அஹமட்

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe