எனது தந்தையை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர் என்பதற்காக தமிழ் மக்களை நான் ஒருபோதும் வெறுக்கவில்லை.
எனது அப்பாவை தமிழீழ விடுதலைப்புலிகள் கொலை செய்தனர் என்பதற்காக, தமிழ் மக்களை நான் ஒருபோதும் வெறுக்கவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கையிலேயே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே எனது தந்தை உயிரிழந்தார். அதற்காக தமிழ்க் கட்சிகளையோ, தமிழ் மக்களையோ வெறுக்கவில்லை.
கட்சிகளுடன் பேச்சு நடத்தி, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு கட்சியின் தலைமைப்பீடம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தந்தைக்காக யாரையும் பழிவாங்கும் நோக்கம் எனக்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.

