ஜபீர்.
நாட்டின் மூவின மக்களும் விரும்பும் ஆட்சியாக தங்களது ஆட்சி அமையவேண்டும் - சிலோன் மீடியா போரம்.
நாட்டின் மூவின மக்களும் விரும்பும் ஆட்சியாளனாகவும், ஆட்சியாகவும் தங்களது ஆட்சி அமைய வேண்டும் என வாழ்த்துகின்றோம் என சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஒப்பமிட்டு நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதானது,
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களில் அதிகமானவர்கள் தங்களின் தலைமைத்துவத்தினை ஏற்று வாக்களித்துள்ளனர். இதே போன்று வடக்கி, கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இத்தேர்தலில் அவர்களின் சமூகம் சார்ந்த அரசியல் தலைமைகளின் வழிநடாத்தலில் வாக்களித்துள்ளார்களே தவிர அம்மக்கள் தங்களுக்கு எதிரானவர்களல்ல. இதனை அவர்களின் ஜனநாயக உரிமையாக தாங்கள் பார்க்க வேண்டும். தங்களது நீதியான, நியாயமான சிறந்த ஆட்சியினால் அம்மக்களின் மனங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்பதே எமது அவாபாகும்.
நாட்டில் இனவாதம் இல்லாமலாக்கப்பட்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம் கட்டியெழுப்படல் வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் நாட்டின் அபிவிருத்தி பிரதேச வேறுபாடுகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.
மேலும் தங்களது ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கான நலனுதவித் திட்டங்கள், விஷேட சேவைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.