புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கான காரணங்களை பிரதி அமைச்சர் நளின் பண்டார பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சஜித்தின் தோல்வியை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலரே பொறுப்பேற்க வேண்டும் என அவர் குற்றம் சாட்டினார். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஸ 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றி கொண்டார். சஜித் பிரேமதாசவின் இந்த தோல்வி குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் 4 சதவீத இடைவெளிதான் காணப்பட்டது. இது கடந்த 21 தாக்குதலின் பின்னர் 36 சதவீதமாக அதிகரித்தது.
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரான நிலையில் அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கை வெளியில் வந்தது. இந்த உடன்படிக்கை தரமற்றது என நான் கூறவரவில்லை. இருப்பினும், இந்த உடன்படிக்கையினால் நாட்டின் சொத்துக்கள் விற்கப்படப் போவதாக எதிர்த் தரப்பினர் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அத்துடன், சஜித் பிரேமதாசவுக்கு ஊடகங்களில் பெற்றுக் கொடுக்கப்பட்ட குறைந்தளவு அவகாசமும் தோல்வியில் தாக்கம் செலுத்தியது.
சிங்கள பௌத்த மக்கள் விகாரையில் ஒன்று கூடும் மக்கள். கடந்த காலத்தில் அரசாங்கம் முன்னெடுத்த சில தீர்மானங்களினால், சிங்கள பௌத்த மக்கள் எங்களை விட்டும் தூரமாகினர். சஜித் பிரேமதாச அதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய நபர் அல்லர். இருப்பினும், அதுவும் அவரின் தலையின் மேல் வந்து வீழ்ந்தது. இந்த அரசாங்கத்தின் ஐந்து வருட காலத்தில் எமது தலைவர்களின் செயற்பாடுகள் மற்றும் பௌத்த விரோத குழுவாக எம்மை எடுத்துக் காட்டியவர்களின் நடவடிக்கைகள் என்பவற்றினால் எமக்கு சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் பாரியளவில் இழக்க வேண்டி ஏற்பட்டது.
இந்த தேர்தல் தோல்வி குறித்து முறையாக மீள்பரிசீலனை செய்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலேயே அரசியல் பயணத்தை தொடரமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடத்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி அமைச்சர் நளின் பண்டார இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

