பௌசர் மஹ்ரூப்.
கோதபாயாவை தவிர்த்து வாக்களித்தவர்களை ஒருவகை உளவியல் நெருக்கடிக்குள் தள்ளும் , பிரச்சாரங்கள் அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ளப்பட வேண்டியவை!
நவீன மகாவம்ச காலத்திற்குள் இலங்கை அரசியல், மீளத்திரும்பி விட்டது என்று சொன்னால் அதில் எந்த மிகையும் இல்லை, முற்று முழுதான உண்மை அதுதான். இதன் பின் விளைவுகளை இட்டு அரசியல் ரீதியாக யோசிப்பதை தவிர நமக்கு முன் வேறு வழிகள் இல்லை. இப்போது அதிகாரத்திற்கு வந்துள்ள கோதா- மகிந்த குழுமத்தினை விமர்சிப்பதல்ல இக்குறிப்பின் நோக்கம், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் மிகத் தெளிவாக இலங்கையின் இன, சமூக, மக்கள் பிரிவினரின் தேர்வை துல்லியமாகக் காட்டுகிறது. புதிய ஜனாதிபதி ரூவன்வெலிசாயவில் இருந்து ஆற்றிய உரையில் , ”தமக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை ” என்கிற ஆதங்கத்தினை அல்லது கோபத்தினை வெளிப்படுத்தி இருந்தார். இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் கோதாவுக்குபெரும் ஆதரவு நிலைப்பாடு எடுத்து வாக்களிக்கவில்லை என்பது உண்மைதான்.
ஆகவே அவர்கள் தான் , ஏன் தமக்கு தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் வாக்களிக்கவில்லை, தம்மை ஆதரிக்காததற்கு உள்ள காரணங்களைத் தேட வேண்டும். அல்லது அதனை நிவர்த்திக்க அரசியல் பணி செய்ய வேண்டுமேயொழிய மக்களை விரல் நீட்டி குற்றம் சொல்வதல்ல அரசியல் வழிமுறை.
கோதா பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள்ளாரே ஒழிய, இலங்கை மக்களின் பெரும்பான்மை ஆதரவை அவர் பெற்று ( 70 தொடக்கம் 75 சத வீதத்திற்கு மேல் ) அவர் தெரிவாகவில்லை. தீர்மான வாக்குச் சக்தி 2.5 வீதமே.இந்த 2.5 சத வீதம் என்பது அங்கு இங்கு பொறுக்கி , தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் அளித்த வாக்கினால் சாத்தியமானது என்கிற முன்வைப்புகளும் உள்ளன.( இதனை இங்கு பேச எடுத்துள்ள விடயத்திற்குள் கொண்டு வர தேவையில்லாத விடயமாகக் கொள்வோம்)
கோதாவுக்கு ஆதரவு தெரிவிக்காத வாக்காளர்களை முன் நிறுத்தி பேசுவோமானால் , தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் தமது இனம், மதம், மொழி, பாரம்பரிய வாழிடம் , பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு அச்சங்கள் இருப்பது ஒருவகை அடையாள அரசியல் சார்ந்தது என்றால், அதனையும் மீறி , இந்த சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களின் கணிசமான பிரிவினருக்கும் (35 இலட்சத்துக்கும் மேட்பட்டவர்கள்), ஜனநாயகம், ஊடக, நீதித்துறை சுதந்திரம், குடும்ப ஆட்சி, ஊழல், ஒரு குடும்பமே நாட்ட்டின் வளங்களை, அதிகாரத்தினை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கட்டற்ற சுரண்டலுக்கு வழியமைப்பது, நாட்டின் பன்மைத்துவத்தினை கட்டிக் காப்பதில் உள்ள அச்சம் என பல்வேறு காரணங்களை முன் வைத்து , அவர்கள் கோதாவை ஆதரிக்க தயங்கி உள்ளார்கள்.
இந்த ஆபத்தான, உளவியல் யுத்தத்திலிருந்து கோதபாயவுக்கு வாக்களித்த தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் வெளியே வர வேண்டும். யார் வெல்லுவார் யார் தோற்பார் என்பதை வைத்துக் கொண்டு, மக்களின் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகள் வருவதில்லை. அப்படியான ஒரு நிலைப்பாட்டினை, தனி மனிதர்களோ, மக்கள் பிரிவினரோ எடுப்பார்களேயானால் அது சந்தர்ப்பவாத நிலைப்பாடே தவிர, உறுதியான அரசியல் நிலைப்பாடு அல்ல.
இந்த நிலைப்பாட்டினை , மக்கள் பிரிவினர் எடுப்பதற்கான உறுதியானதும், ஆழமானதுமான சான்றுகள் இருக்கின்றன. சமத்துவமாகவும், இயல்பாகவும், தனி மனித, சமூக சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான மக்களின் அடிப்படை உணர்வுகளும், அவர் தம் தீரா எதிர்பார்ப்பும் இந்த முடிவுக்கு அடிப்படைகளாக இருக்கின்றன என்பதை வெற்றிக் களிப்பில் வீற்றீருக்கும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அம்பு,படை, ஆட்பலத்துக்கு இதனை சொல்லி வைக்க வேண்டும்.
இறுதி வரை தாம் எடுத்த எடுத்த அரசியல் நிலைப்பாட்டில் மக்களாகிய நாம் உறுதியாக இருக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உந்தித் தள்ளிய அடிப்படைக் காரணிகள் இலங்கை அரசியல் மட்டத்தில் நிலவும் வரை , அதற்கு எதிராக மக்கள் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை.இதில் எந்த தவறும் இல்லை, கழிவிரக்கம் கொள்ளவோ, தமது முடிவினை மீள்பரிசீலனை செய்யவோ எந்த அவசியமும் இல்லை. மக்களாகிய நீங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் முடிவெடுத்துள்ளீர்கள். அந்த உறுதியுடன் இருங்கள்.
நமது அரசியல் தலைமைகளின் அவசரத்திற்கு வேண்டுமானால் அவர்கள் தமது பதவிச் சுகத்திற்காக, எந்த மாற்றமும் இல்லாத நவீன மகாவம்ச கால அரச அதிகாரத்திற்கு கீழ் சரணடையட்டும். மகிந்த- கோதா குழுமத்திற்கு வெட்கம். சூடு, சுரணையின்றி தொண்டுழியம் செய்யட்டும்.
எங்களுக்கு கோதா குழுமத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த பாராளுமன்ற தமிழ்,முஸ்லிம் தரகு அரசியல் தலைமைகளை மோவி நின்று ,ஒரு உறுதியான அரசியல் சமூகங்களாக நாம் இந்த விடயங்களை கையாளுவோம். எங்களை அரவணைத்து , சமமாக நடத்தினால் ஆதரவு தருவோம், அடித்து, அச்சப்படுத்தினால் உங்கள் அதிகாரத்தின் முன் நாம் வீழ்ந்துவிடோம்.
ஒரு அரசு- அரசாங்கத் தலைமை என்கிற வகையில் அவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் தம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் , இந்த மக்கள் சமூகங்களிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லட்டும். அதனை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை மக்கள் சொல்வார்கள்.
அதிமேதகு கோதபாய அவர்களே!
நவீன மகாவம்ச மன்னர் மகிந்தவே!
நீங்கள் பூடகமாக, இரட்டை அர்த்தத்துடன் சொல்ல வேண்டாம், நேரடியாக உங்கள் திருவாய் திறந்து சொல்லுங்கள் ......தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக தமிழர்களும் மட்டுமல்ல, உங்களை நிராகரித்த சிங்கள மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை ...