(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர பிரதேசங்களில் இயற்கை அனர்த்த அபாய பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை கூட்டுப்பொறுப்புடன் முன்னெடுப்பதற்காக முப்பதுக்கு மேற்பட்ட அரச மற்றும் அரசசாரா நிறுவனங்களை உள்ளடக்கிய அனர்த்த முகாமைத்துவ செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கல்முனையிலுள்ள அரச நிறுவனங்களின் பிரதானிகளுடனான உயர்மட்டக் கூட்டம் திங்களன்று (25) மாலை கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றில் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அனைத்து நிறுவனங்களும் பரஸ்பரம் ஒத்துழைத்து, கூட்டுப்பொறுப்புடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் திட்டமிடப்பட்டன.
எத்தகைய அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் உடனடியாக சம்மந்தப்பட்ட இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொறிமுறைகள் தொடர்பிலும் அவர்களை தங்க வைப்பதற்கான பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.