Ads Area

சாய்ந்தமருது பள்ளிவாசலின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை மக்கள் உணர்ந்து விட்டதையே தேர்தல் பெறுபேறு காட்டுகிறது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பள்ளிவாசலின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை மக்கள் உணர்ந்து விட்டதையே தேர்தல் பெறுபேறு காட்டுகிறது - ஜெமீல்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை, பாதுகாப்பு, இருப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு, எமது வேண்டுகோளையேற்று சஜித் பிரேமதாசவுக்கு அமோக ஆதரவளித்த சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாம் ஆதரவு வழங்கிய வேட்பாளர் தோல்வியுற்றாலும் எல்லாம் வல்ல இறைவன் அதில் எமக்கு மறைவான வெற்றியை வைத்திருப்பான் என்று திடமாக நம்புவோம். எதுவும் இறைவன் நாட்டப்படியே நடந்தேறும் என்பதும் இஸ்லாமியர்களாகிய நமது நம்பிக்கையாகும்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 15548 ஆகும். இதில் 13470 வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மக்கள் பணிமனை மற்றும் தோடம்பழ சுயேட்சைக்குழு என்பவற்றின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக களமிறங்கி, இந்த மண்ணுக்கு மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்டு வந்து, அவர்கள் மூலம் சாய்ந்தமருது நகர சபைக்கான வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையிலும், நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு அமோக ஆதரவு வழங்கியிருப்பதானது வரலாற்றில் என்றும் பதியப்பட வேண்டியதொரு அரசியல் திருப்பமாகும்.

இவ்வாறே மாளிகைக்காடு பிரதேச மக்களும் உண்மையை உணர்ந்து, நியாயத்தின் பக்கம் நின்று தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சிலரின் அரசியல் அஜந்தாக்களுக்காக பள்ளிவாசலின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு மக்கள் உணர்ந்து விட்டனர் என்பதை தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்தியிருக்கிறது.

சாய்ந்தமருது நகர சபைக்கான நுழைவாயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதையும் அதற்காக இதயசுத்தியுடன் நான் என்றும் போல் முன்னிற்பேன் என்பதையும் உணர்ந்து, நீங்கள் எம்மோடு அணிதிரண்டு வாக்களித்துள்ளீர்கள். இன்ஷா அல்லாஹ் உங்களது நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது என்று இத்தருணத்தில் உறுதியளிக்கின்றேன்.

யார் ஆட்சியமைத்தாலும் உங்களால் என் தோளில் சுமத்தப்பட்டிருக்கும் அமானிதத்தை நிச்சயம் பாதுகாத்து, எமது மூன்று தசாப்த கால அபிலாஷையை வென்று தருவதற்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என்ற எனது திடசங்கற்பத்தையும் வெளிப்படுத்துகின்றேன்.

அத்துடன் நமது பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் சகல நன்மை பயக்கும் விடயங்களுக்காகவும் எனது முழுமையான அர்ப்பணிப்பு இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் இருக்கும் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe