(அஸ்லம் எஸ்.மௌலானா)
பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இத்தேர்தலை சிறுபான்மையினர் பயன்படுத்தியுள்ளனர் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"இந்த ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு சிறுபான்மையினர் சர்வதேசத்திற்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லியுள்ளனர். இதன் மூலம் பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான தமது நிலைப்பாட்டை சிறுபான்மையினர் மீண்டுமொரு முறை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை கவனத்திற் கொண்டு அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பை புதிய ஆட்சியாளரான ஜனாதிபதி கோட்டாபய சுமந்திருக்கிறார். சிறுபான்மையினர் மீது எவ்வித பாரபட்சமும் காட்டாமல், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மத, கலாசார, சமூக உரிமைகளையும் அபிலாஷைகளையும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதையே இத்தேர்தல் பெறுபேறு வலியுறுத்தி நிற்கிறது. புதிய ஆட்சியாளர்கள் இதனை பொறுப்புடன் கவனத்தில் எடுத்து செயலாற்ற முன்வர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
அதேவேளை நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு அமோகமாக வாக்களித்து சிறுபான்மையினரின் ஒற்றுமையை உலகுக்கு வெளிப்படுத்திய கல்முனை மாநகர வாக்காளப் பெருமக்களுக்கு மாநகர முதல்வர் என்ற வகையில் எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் தொகுதி ரீதியாக பிரசார பணிகளுக்கு தலைமைதத்துவம் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் கல்முனை மாநகர சபையின் எமது அணி சார்பான உறுப்பினர்கள், பிரதேச, வட்டார அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் இரவு, பகலாக பாடுபட்ட போராளிகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.