Ads Area

சஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.

வை எல் எஸ் ஹமீட்

ஒப்பீடும் நியாயங்களும்

1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானார்கள். இந்த ஆட்சியிலும் ஆளானார்கள். ஆனாலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் கடந்த ஆட்சியிலேயே செயற்கையாக உருவாக்கப்பட்டு இந்த ஆட்சியிலும் அது தொடர்ந்தது.

அந்த அரசாங்கம் அது உருவாகி விஸ்வரூபமெடுக்க வழிவிட்டது. இந்த அரசாங்கம் அது தொடர அனுமதித்தது. ஆனால் கடந்த பாகத்திற் குறிப்பிட்டதுபோல இவ்வினவாதச் செயல்களின் பிரதான சூத்திரதாரிகள், தலைமை தாங்கி வழிநடாத்தியவர்களில் ஒருவர் இப்பக்கம் இருக்க, ஏனைய அனைவரும் அப்பக்கமே இருக்கின்றனர்.

எனவே, அப்பக்கம் ( மொட்டு) பாதிப்புக்குறைவாக இருக்குமா? இப்பக்கம் பாதிப்பு குறைவாக இருக்குமா? அன்று மொத்த சிறுபான்மையும் முழுமையாக ஒன்றுபட்டு, பிரார்த்தனைகள் புரிந்து ( உம்றா சென்று) ஆந்த ஆட்சியைத் தோற்கடித்தனர். இன்றும் ஒற்றுமை இருந்தபோதிலும் அன்றைய அளவில் இல்லை. இது அன்றிருந்த இனவாத அகோரத்தைவிட இன்றைய அகோரம் சற்றேனும் குறைவு என்பதற்கு அத்தாட்சியாகாதா?

2)அன்றைய ஆட்சியில் இனவாதத்தை அனுமதிப்பதில் பிரதான பங்குவகித்த பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர்தான் இன்று போட்டியிடுகின்றார். இந்தப்பக்கம் உள்ளவர் ஓர் அமைச்சராக இவ்வாட்சியில் இருந்தபோதும் பாதுகாப்புடன் தொடர்புபட்டிருக்கவில்லை.

அவர் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இனவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு, பொதுபலசேனா முஸ்லிம்களின் உணர்வுகளைக் குத்தி ரணகளமாக்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் பொதுபலசேனா காரியாலத் திறப்புவிழவுக்கு சென்று அவர்களுடனே தான்இருப்பதுபோன்ற ஒரு செய்தியை மொத்த இனவாதிகளுக்கும் வழங்கினார். முஸ்லிம்களின் உணர்வுகளைக் கண்டுகொள்ளவில்லை.

அதேநேரம் இந்தவேட்பாளர் தொடர்பாக அவரைப்போன்று பெரிதாக விரல்நீட்ட எதுவுமில்லாதபோதும் பல்கலைக்கழக மாணவர்கள் தூபியில் ஏறிய விடயத்தில் அவரது அறிக்கை முஸ்லிம்களை மிகவும் புண்படுத்தியதோடு அவரின் அளவு இவர் இனவாதத்தில் தீவிரமில்லாதவராக இருந்தாலும் முழுக்க முழுக்க இனவாதத்திற்கு அப்பாற்பட்டவராக இவரையும் பார்க்க முடியாதோ! என்ற சந்தேகத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுப்பியது.

மட்டுமல்ல, தான் ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் இருந்தவர் முஸ்லிம்கள் அடிபட்ட சமயத்தில் ஆறுதலுக்காகவேனும் எதுவும் கூறாதது அச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

மறுபுறம், தன் தம்பியின் வடிவத்தில் இந்நாட்டை மீண்டும் ஆளத்துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்புக்கெடுபிடிகளால், அப்பாவிகளின் கைதுகளால் முஸ்லிம்கள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் தேடுதல்களை, கைதுகளை அரசாங்கம் நிறுத்தியபோது, அதற்கெதிராக ஆவேசக்குரல்கொடுத்து சகல முஸ்லிம்களின் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் தேடுதல் நடத்தவேண்டுமென்றாரே! முஸ்லிம்களுக்கெதிரான இவரது மனோநிலைக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

இவர்கள் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும்? எத்தனை கைதுகள் நடக்கும்? எத்தனை பள்ளிவால்கள், எத்தனை வீடுகளில் ராணுவத்தினர் புகுவார்கள்? நாய்கள் புகும்? தேடுதல் என்ற பெயரில்? யாரோ ஓர் வழிகெடுக்கப்பட்ட கும்பல் செய்த அநியாயத்திற்காக ஏற்கனவே கைதென்றும் தேடுதலென்றும் கொடுமைகளை அனுபவித்தோம். அந்தக் கொடுமைகளுக்காகவே ஆளும் கட்சியின் வேட்பாளருக்கெதிராக வாக்களிக்க பலர் நினைக்கிறார்கள். அதில் ஒரு நியாமிருக்கலாம்.

அதற்காக, அந்தக் கொடுமைகள் போதாது; அந்தக் கைதுகள் தேடுதல்கள் போதாது; என்றவர்களுக்கு; அதனை நிறுத்தியதற்காக அரசாங்கத்தையே சாடியவர்களுக்கு வாக்களிக்க நினைக்கின்ற சகோதரர்கள் இருக்கின்றார்களே! இதை என்னவென்று சொல்வது? நாங்கள் அடிபட்டவேளை மௌனமாக இருந்தவரை பிழைகாண்கின்றோம்; நியாயம்தான். அடித்தது போதாது; என்றவரை ஆதரிக்க முற்படுவது நியாயமா?

3)Dr ஷாபியின் நாடகத்தை அரங்கேற்றிய மதகுருவும் அங்கே இருக்கின்றார்; என்பது ஒரு விடயம். ஷாபி கைதுசெய்யப்பட்ட இரண்டொரு தினங்களில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து முறைப்பாடு கோரியபோது “ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும்”; என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை விடுத்து முறைப்பாடு செய்வதற்கு அப்பெண்களைத் தூண்டினாரே முன்னாள் ஜனாதிபதி, முஸ்லிம்களுக்கெதிரான அவர்களது மனோநிலையைச் சிந்தீர்களா? அவர்களுக்கா வாக்களிக்கப்போகிறீர்கள்?

4)இன்று மொட்டுத்தரப்பினர் தேசியப்பாதுகாப்பு, தீவிரவாதத்தை அகற்றல் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புபடுத்தியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நேற்று பேருவளையில்கூட மொட்டு வேட்பாளர் அதைத்தான் பேசுகின்றார். தீவிரவாதிகள் என்று அவர்கள் கூறுவது யாரை? யுத்தம் நடைபெற்றபோது தீவிரவாதி, பயங்கரவாதி என்ற சொற்கள் தமிழர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் 21 இற்குப்பின் அவை முஸ்லிம்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன; என்பதை நாம் அறிவோமா? முஸ்லிம்களுக்கு மத்தியில் யாராவது உண்மையான தீவிரவாதிகள் இருந்தால் அவர்களைக் கைதுசெய்வதை யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். மட்டுமல்ல, முஸ்லிம்களே காட்டிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் இவர்கள் தீவிரவாகள் எனும் பதத்தின்மூலம் முஸ்லிம்களைக் குறிவைப்பதைச் சிந்திக்கின்றோமா?

அன்று ‘கிரீஸ்மேன்’ ஐ அனுப்பி முஸ்லிம்களுக்கு மத்தியில் தீவிரவாதிகள் இருக்கின்றார்களா? கிறீஸ்மேனைத் தாக்க ஆயுதங்களுடன் வெளிவருவார்களா? எனத் தேடினார்கள். முஸ்லிம்களுக்கு மத்தியில் தாம் உருவாக்க முயற்சித்த தீவிரவாதம் வெற்றிபெற்றிருக்கிறதா? என்ற பரீட்சையாக கிரீஸ்மேன் வரவு இருந்திருக்கலாம்.

ஏப்ரல் 21 ம் திகதிவரை முஸ்லிம்களுக்கு மத்தியில் பயங்கரவாதம் என்ற ஒன்றை யாரும் கற்பனை செய்யக்கூட சந்தர்ப்பம் இருக்கவில்லை. தமிழ்ப்பயங்கரவாதமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்நிலையில் 2015ம் ஆண்டுக்கு முன்னரே பயங்கரவாதிகளைப்பற்றி, தீவிரவாதிகளைப்பற்றி தகவல் பெறுவதற்கு சஹ்ரான் போன்றவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதென்றால் யார் அந்தப் பயங்கரவாதிகள்?

அந்த சஹ்ரான், தானே எவ்வாறு பயங்கரவாதியானான்? அன்றே ஞானசார தேரர் முஸ்லிம் தீவிரவாதிகளைப் பற்றிப் பேசினாரே! எந்த அடிப்படையில்? அவர் முன்னறிவிப்பு செய்ததுபோல் முஸ்லிம் பயங்கரவாதமும் உருவானதே! அதுவும் அவர்களிடம் சம்பளம் பெற்று அவர்களின் கண்காணிப்பில் இருந்த ஒருவனே அந்தப் பயங்கரவாதக்குழூவின் தலைவனானே? இதெல்லாம் நீண்ட திட்டமிடலா?

அவ்வாறாயின் எதிர்காலத் திட்டமென்ன? ஏன் விஞ்ஞாபனத்திலோ, தேர்தல் மேடைகளிலோ பன்முகத்தன்மை, சமூக நல்லிணக்கம் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, தீவிரவாதத்தையும் தேசிய பாதுகாப்பைப்பற்றியும் மாத்திரம் பேசுகிறார்கள்?

அடுத்த வேட்பாளர் தனது விஞ்ஞாபனத்தில் பன்முகத்தன்மை தொடர்பாக ஒரு தனிப்பகுதியில் குறிப்பிட்டிருக்கிறார். மட்டுமல்ல, சகல மேடைகளிலும் பன்முகத்தன்மை தொடர்பாக பேசுகிறார்.

தேசிய பாதுகாப்பை தனியாக ராணுவ பாதுகாப்பு என்பதற்குள் மட்டுப்படுத்தாமல், சமூக, பொருளாதார பாதுகாப்போடு அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்காக மதவாதிகளைக்கொண்டு உருவாக்குகின்ற தீவிரவாதத்தையும் உள்ளடக்கி அவைபற்றி தொடர்ந்து பல நிகழ்வுகளில் பேசுகிறார். இனவாதிகளுக்கெதிராக தாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கூறுகின்றார்.

அரசியல்வாதிகள் தாம் கூறுவதையெல்லாம் செய்வார்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆனால், ஆகக்குறைந்தது அவர் இந்தவிடயங்களை விஞ்ஞாபனத்திலும் மேடைகளிலும் பேசுகின்றாரே! அவர் சொல்வதுபோல் செய்வாரா? என்பதற்கு எதிர்காலம்தான் பதில் கூறவேண்டும். ஆனால் அவற்றை எல்லா இடங்களிலும் அவர் பேசுவது அவர் மனதில் சமூக நல்லிணக்கம் ஆழமாக பதிந்திருப்பதை காட்டுகின்றதல்லவா?

மறுபுறம் ஒப்புக்காவது பேசுகின்றார்களா? வடக்கிலும் தெற்கிலும் ஒன்றையே பேசுகின்றார்களா? அவர்களது பேச்சுக்கள் அவர்களது உள்ளங்களை வெளிப்படுத்தவில்லையா? சிந்திக்கமுடியாதவர்களா நாம்?

இதில் இன்னும் முக்கியம் என்னவென்றால் இன்று முழு நாட்டிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் பரவியிருக்கின்ற சூழலில் ஒரு சிங்களத் தலைவராக இனவாதத்திற்கெதிராக குரல்கொடுத்து வந்து அநுரகுமார மாத்திரம்தான். ஆனால் இன்று சஜித்தும் நாடுபூராக இனவாதத்திற்கெதிராக பேசுவது இந்நாட்டில் இனவாதத்தைக் களைவதில் ஒரு பிரதான முன்னெடுப்பு இல்லையா?

இனவாதத்திற்கெதிராக மஹிந்தவோ, கோட்டாவோ, கடந்த ஆட்சியிலோ, இத்தேர்தலிலோ எப்பொழுதாவது பேசினார்களா? பேசுகிறார்களா? இது அவர்களது இனவாத உள்ளத்தை வெளிப்படுத்தவில்லையா? எனவே, யாருக்கு வாக்களிக்க வேண்டும்; சிந்தியுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இறுதியாக
இனவாதிகளை இருவகையாக பிரிக்கலாம்.

ஒன்று: அரசியல்வாதிகளான இனவாதிகள்; இரண்டு: மதகுருக்களான இனவாதிகள். ஆட்சியாளர் இனவாதத்திற்கப்பாற்பட்டவராக அல்லது இனவாதத்தில் குறைந்தவராக இருந்தால் அவர்களும் அமர்ந்தே ஆடுவார்கள். அவர்கள் மாறுபட்டவர்களாக இருந்தால் அவர்களும் எழுந்து ஆடுவார்கள்.
அந்தவகையில் அன்னத்தின் பக்கம் அரசியல்வாதியான ஒரு பெரிய இனவாதி சம்பிக்க இருக்கின்றார்.

மறுபுறம் ஒரு தொகை அரசியல்வாதிகளான இனவாதிகள் இருக்கிறார்கள். விஜேதாச தொடக்கம் விமல், உதய ....என்று இவர்களைவிட ஆபத்தானவர்கள்தான் மதகுருவான இனவாதிகள். ஒட்டுமொத்த இனவாத மதகுருக்கூட்டமே அந்தப் பக்கம்தான் இருக்கிறது. இறைச்சிக்கடைமுதல் டாக்டர் ஷாபி போன்ற டாக்டர்களை வேட்டையாடும் பேச்சுக்களை இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்?

எனவே, அன்பின் சகோதரர்களே! உங்கள் வாக்கை நீங்கள் விரும்பும் வேட்பாளர்கட்கு அளிக்கின்ற உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை உங்கள் பிழையான புரிதலின் காரணமாக அல்லது சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள்மீது உங்களுக்கிருக்கும் கோபத்தின் காரணமாக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சமூகத்திற்கெதிராக பாவித்துவிடாதீர்கள்; அல்லாஹ்வுக்காக.

இஸ்லாத்தின் பார்வையில் உங்கள் “வாக்கு” என்பது ஒரு “ சாட்சி” என்று உலமாக்கள் கூறுகிறார்கள். மொட்டுத்தரப்பினர் முஸ்லிம்களைப் பாதுகாப்பார்கள் அல்லது மேற்கூறிய விடயங்களின் பின்னணியில் முஸ்லிம்களுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிவர்கள்; என சாட்சி சொல்லப்போகிறீர்களா?

அந்தப் பாவத்தை செய்யாதீர்கள். கடந்த தேர்தலில் நாம் புரிந்த பிரார்த்தனைகள், குறிப்பாக உம்றா சென்று செய்த பிரார்த்தனைகளை நினைத்துப் பாருங்கள். அவ்வாறு பிரார்த்தித்து அகற்றியவர்களை மீண்டும் ஆட்சிக்கொண்டுவர நீங்களே பங்களிப்பு செய்துவிடாதீர்கள்.

அன்று, “ யாஅல்லாஹ்! இந்த அநியாய ஆட்சியாளர்களை அகற்றிவிடு” என்று பிரார்த்தனை செய்த நீங்கள் அதே ஆட்களை, இவர்கள்தான் முஸ்லிம்களுக்கும் இந்நாட்டிற்கும் சிறந்த ஆட்சியாளர்கள்;” என சாட்சி சொல்லத் தயாரான சொற்ப எண்ணிக்கையான சகோதரர்களே!

அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள். மறுமையைப் பயந்துகொள்ளுங்கள்.
கேள்விகணக்கு கேட்கப்படும்; என்பதை நினைவுற்கொள்ளுங்கள்.
(முற்றும், அல்ஹம்துலில்லாஹ்)

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்?
பாகம்-12 - இத்துடன் இத்தொடர் முடிவுற்றது.
புள்ளிவிபரம் தனியாக பதிவிடப்படும், இன்ஷாஅல்லாஹ்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe