உலகில் அதிகளவிலான இரட்டையர்கள் பங்குபெறும் கூட்டம் ஒன்றை நடத்தி கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கை வாழ் இரட்டையர்கள் தயாராகி வருகின்றனர். இலங்கை வாழ் இரட்டையர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இரட்டையர்கள் அமைப்பினால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இரட்டையர்களின் கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து இனங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கும் இந்த அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி உலக நாடுகளிலுள்ள இரட்டையர்களை இலங்கைக்கு அழைத்து, மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதில் தங்களின் 28,000 உறுப்பினர்களோடு பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற இரட்டையர்களும் கலந்துகொள்வர்.
இம்மாநாட்டின் மூலம் இரட்டையர்களை அதிகளவில் ஒன்றுகூட செய்து உலக சாதனை படைக்க எண்ணியிருப்பதாக இலங்கை இரட்டையர்கள் அமைப்பின் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த மாநாட்டில் பங்குகொள்ளும் இரட்டையர்கள் 8 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதுடன், அவர்களை இலங்கையின் முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்ல இருப்பதாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.
இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பூரக்க செனவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன ஆகியோர் இரட்டையர்கள் இவர்கள் இருவரும் இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ளனர்.
ஒரே நேரத்தில் இலங்கை இராணுவத்தில் சேர்ந்ததோடு, ஒரே நேரம் தாங்கள் பதவி உயர்வு பெற்றதாக பிபிசி தமிழிடம் இவர்கள் தெரிவித்தனர்.
உலகிலேயே மேஜர் ஜெனரல்களாக ஒரே தரத்தில் ராணுவத்தில் பணியாற்றும் இரட்டையர்கள் தாங்கள் மட்டுமே இருக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாமும், தமது அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வுகளில் இவ்வாறு ராணுவத்தில் மேஜர் ஜெனரல்களாக பதவி வகிக்கும் இரட்டையர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனினும், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி நடத்தப்படும் மாநாட்டின்போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்படும் என இரட்டை மேஜர் ஜெனரல்களான பூரக்க செனவிரத்ன மற்றும் ஜயந்த செனவிரத்ன ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இலங்கையில் இரட்டையர்களாக பிறந்த பலரும் இலங்கை பாதுகாப்பு பிரிவில் அதாவது இலங்கை கடற்படை, விமானப்படை, இராணுவம் என முப்படைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இரட்டையர்களாக பிறந்த கசுனி ரவீனா ஜயரட்ன மற்றும் இருணி மனிஷா ஜயரட்ன இருவரும் ஒரே வைத்தியசாலையில் தாதியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களும் இலங்கை இரட்டையர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
´´எமது வாழ்க்கையில் இடம்பெறுகின்ற அனைத்து விடயங்களும் மிகவும் அழகியனவாக இருக்கின்றன. எமது தொழிலை எடுத்துக்கொண்டால், மிகவும் அழகிய பல அனுபவங்கள் உள்ளன. இரட்டையர்கள் என்பதனால் ஒரே மாதிரி அல்லவா இருக்கின்றோம். வைத்தியசாலையில் பணியாற்றுகின்றபோது, பிரச்சினை சற்று அதிகமாக காணப்படுகின்றது. நோயாளிகள், வைத்தியர்கள், சக ஊழியர்கள் என அனைவரும் எம்மை மாற்றி அடையாளப்படுத்திக் கொள்வார்கள். தங்கை செய்த தவறுகளுக்காக நான் தண்டனை அனுபவித்த நாட்களும் இருக்கின்றன. பாடசாலை செல்லும் காலம் முதல் இந்த பிரச்சினை காணப்படுகின்றது. எனினும், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டோம். இவை அனைத்தும் மிகவும் அழகான அனுபவங்கள்" என இரட்டை தாதியரகள் குறிப்பிடுகின்றனர்.
பதியதெலேல்லே சுகதசார தேரர், பதியதெலேல்லே விப்புலசார தேரர் ஆகிய இருவரும் பௌத்த துறவியர். இலங்கை இரட்டையர்கள் அமைப்பில் இந்த பௌத்த துறவிகளும் உறுப்பினர்களாக இருப்பது சிறப்பாகும். இரட்டையர்களான இவ்விருவரும் ஒரே தருணத்தில் பௌத்த துறவியாகியுள்ளனர்.
இலங்கையிலுள்ள இரட்டையர்களை ஒன்றிணைந்து எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர்களான உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
இரட்டையர்களுடனான பாரத நாட்டிய குழு, நடனக்குழு, கிரிக்கெட் அணி என பல குழுக்களை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இரட்டையர்களுக்காக சர்வதேச தினத்தை அறிவிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான ஆலோசனையை இலங்கை அரசிடம் வழங்கியுள்ளதாகவும், இலங்கையில் இரட்டையர்களுக்கான தேசிய தினம் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து, அந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கி சர்வதேச தினத்தை ஏற்படுத்தி திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, இரட்டையர்களாக பிறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் இரட்டையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான உதவிகளை வழங்கும் நோக்குடனேயே தாம் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரட்டையர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் உலக சாதனையை படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபுலி கமகே மற்றும் ஷமலி கமகே ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
(பிபிசி தமிழ்)