Ads Area

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளார்களா ? இச் சம்பவங்கள் உங்களுக்கு படிப்பினை தரலாம்.

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளார்களா ? இம் 3 சம்பவங்களும் உங்களுக்கு படிப்பினை தரலாம். 

சம்பவம் -01

ஷாணி 16 வயது பள்ளி செல்லும் மாணவி , மிகவும் துடிதுடிப்பானவள், கெட்டிக்காரி அதுபோல் பேரழகி. பள்ளி செல்லும் இளவல்களின் மங்காத பேசு பொருள். பணக்கார வீட்டு செல்லப் பிள்ளை. பெற்றோர் இருவரும் மிகப்பெரும் நிறுவனங்களில் 6 இலக்கங்களில் சம்பளம் வாங்குகிற பெரும்புள்ளிகள். இதனால் அவள் போகின்ற வருகின்ற வழிகளெல்லாம் வாலிபக் கூட்டம். இந்த தொல்லைகளை தவிர்ப்பதற்காக அவள் பயணிப்பதற்கென்றே ஒரு சொகுசு கார் அதற்கென்று தனியான ஒரு நம்பிக்கையான, மிக நம்பிக்கையான ட்ரைவர். இப்படியாக மிகவும் பாதுகாப்பான சூழலில் வளர்ந்து வந்த அந்தப் பெண்பிள்ளை ஒருநாள் வயிற்று வலியால் அவதிப்படுகிறாள். உடனே மருத்துவமனைக்கு எடுத்து வரப்படுகிறாள். வைத்திய பரிசோதனைகளின் போது அவளது வயிற்றில் இரண்டு மாத சிசு வளர்வது கண்டு பிடிக்கப்படுகின்றது. இந்த செய்தியை கேள்வியுற்ற பெற்றோர்கள் இருவருமே மயங்கி விழுந்து விடுகின்றனர். கதை போல் இருந்தாலும் இது உண்மை. கடைசியிலே அந்த குழந்தைக்கு காரணம் அவள் அங்கள், அங்கள் என்று அன்போடு அழைக்கின்ற, பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் நம்பிக்கையானவர், மிக நம்பிக்கையானவர் என முத்திரை குத்தப்பட்ட வாகனச் சாரதி தான் என்பது தெளிவாகின்றது.

சம்பவம் - 02 

ஐந்து வயதுள்ள சின்மயி மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவள். எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் மிகுந்த ஆரோக்கியமுடன் வளர்ந்து வருகின்ற ஓர் சிறுமி. ஒரு சில வாரங்களாக அவளின் நடத்தையில் பல்வேறுபட்ட மாற்றங்கள். வழமை போல் அமைதியாக இல்லை . எடுத்ததற்கெல்லாம் அழுகிறாள் , முறண்டுபிடிக்கிறாள், ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது, முறையாக தூங்குவது கிடையாது . முன்னரைப் போல் சிரித்த முகம் இல்லாமல் சோர்ந்து போய் விடுகிறாள். இப்படி சில வாரங்களாக இருந்தவள் ஒருநாள் திடீர் திடீரென காரணமில்லாமல் சிரிப்பதும் அழுவதும் இடை இடையே தனியே கதைப்பதுமாக , மொத்தமாக ஒரு பைத்தியத்தின் உருவமாக மாறி விடுகிறாள். இப்பொழுது வைத்தியத்திற்காக அனுமதிக்கப்படுகிறாள். பல் வேறுபட்ட பரிசோதனைகளை செய்துகொண்டு எல்லாமே நோமல் என வருகின்றது. கொஞ்சம் ஆழமாக அவருடன் கதைத்த போது, கவுன்சலிங் செய்தபோது போது அவள் வீட்டிற்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்காக வருகின்ற ஐம்பது வயது ஆசிரியரினால் கடந்த ஒரு மாதமாக தொடர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்ற விஷயம் வெளியே வருகின்றது. தொடர் பாலியல் துன்புறுத்தலினால் ஏற்பட்ட மனப்பிரள்வே இவ்வாறான நிலைமைக்குத் காரணம் எனவும் கண்டறியப்படுகிறது.

சம்பவம்-03

முராசில் 13 வயது ஒரு சூறத்தான ஹிப்ழு மாணவன். அடிக்கடி வயிற்று நோவு , மலச்சிக்கல் மற்றும் சிறுநீரில் கிருமித் தொற்று என வைத்தியத்திற்காக வருகின்ற ஒரு பையன். தொடர்ச்சியான பரிசோதனைகளின் போது பெரிதாக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கடைசியாக ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ஒரு வைத்திய பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவனுக்கு சிபிலிசு எனும் பாலியல் நோய் இருப்பதாக கண்டு பிடிக்கப்படுகின்றது. அதற்கு காரணம் அவனது உஸ்தாத் தான் என்பதும் இறுதியிலேயே தெரியவருகிறது .

இவைகளெல்லாம் நான் கடந்த காலங்களில் சந்தித்த பல்வேறுபட்ட பாலியல் துஷ்பிரயோகங்களின் ஆழ அகலத்தை தெளிவுபடுத்துகின்ற ஒரு குறுக்கு வெட்டுமுகம் மட்டுமே. எல்லாவற்றையும் எழுதப் போனால் ஒரு தொடர் கட்டுரையே வந்துவிடும்.

பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக மருத்துவ பீடத்தில் நான்காம் ஐந்தாம் ஆண்டுகளில் சட்டமருத்தவத்திலும், சிறுவர் மருத்துவத்திலும் படித்தபோது இவைகள் எல்லாம் இங்கே நடக்கின்றதா இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். இவைகள் எல்லாம் எங்கோ உலகின் ஒரு மூலையில் வெள்ளைக்காரர்களால் செய்யப்படும் அல்லது கதைகளில் மட்டுமே சாத்தியமாருக்கின்ற செயல்கள் என்று உறுதியாக நம்பியவர்களின் தலைவன். அதன்பின் பயிற்சி வைத்தியராக மற்றும் சிறு பிள்ளை வைத்தியராக , பயிற்சி வைத்திய நிபுணராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றிய காலப்பகுதிகளில் நான் கண்டு , கேட்டு, பெற்ற அனுபவங்களின் மூலம் இந்த எண்ணம் தலைகீழாக மாறிவிட்டுருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் நான் கேட்பவைகளை, பார்ப்பவைகைளை எல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் குழந்தைகளை வெளியே விடவே மாட்டீர்கள்.

பொது­வாக சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மா­னது பல்­வேறு வடி­வங்­களில் நடைபெறுகிறது. இது உட­லியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Physical abuse), உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Psychological abuse), பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Sexual abuse), உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்(Emotional abuse ), புறக்­க­ணிப்பு ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோகம் (Neglect) எனப் பல்­வேறு கோணங்­களில் சிறு­வர்கள் மீது பிரயோகிக்கப் படுகிறது. இதில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நாட்டில் அண்­மை­கா­ல­மாக அதி­க­ரித்­தி­ருப்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ள­து.

மதரு­மா­ரினால் பாலியல் வன்­கொ­டு­மைக்கு ஆளாகும் சிறு­வர்கள், ஆசிரி­யர்களினால், ஆலோ­சகர்­க­ளினால் பலாத்­கா­ரங்­க­ளுக்கு உள்­ளாகும் மாண­வர்கள், வைத்­தி­ய­ரினால் பாலியல் இம்­சைக்­குக்கு உள்­ளாகும் நோயாளிச் சிறு­வர்கள், தந்­தை­யினால் வன்­பு­ணர்­வுக்கு ஆளாகும் மகள், அண்­ண­னினால் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாகும் தங்கை, மாமா­வினால் பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாகும் மரு­மகள் என்று துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு ஆளாகும் சம்­ப­வங்கள் தினமும் நடந்­தே­று­வதை நீங்களும் ஊடகச் செய்­திகள் மூலம் அறி­ந்துதான் இருப்பீர்கள். ஆனால் மார்க்கம் பேசுபவர்களாலும், மார்க்கம் போதிக்க பாடசாலைகள் நடத்துபவர்களாலும், இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடருவது மட்டுமல்லாமல் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், உண்மையை மறைக்கவும், இந்த இயக்க பக்தர்களும், நிர்வாகிகளும், அமைப்புக்களும் , ஏன் ஊர் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியிடுவதை பார்க்கும் போது மட்டுமே இந்த சிறுவர் துஸ்பிரயோகம் வியாபித்திருக்கும் விஸ்தீரணங்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சமூகமாக நாம் முன்னேற இன்னும் நிறைய தூரம் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடை பெற கார­ண­மென்ன, துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள். எத்­த­கை­ய­வர்­களால் துஷ்­பி­ர­யோகம் ஏற்­ப­டு­கி­றது. துஷ்­பி­ர­யோகச் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களை எவ்­வாறு பாது­காக்­கலாம் அதற்­கான முறை­யான பொறி­மு­றைகள் எவை போன்ற பூரண அறிவை பெறு­வது மிக அவ­சி­ய­மாகும். இவை குறித்த முறை­யான விழிப்­பு­ணர்­வூட்டல் நட­வ­டிக்­கை­கள் முறை­யா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யிலும் பெற்­றோர்கள், பாது­கா­வ­லர்கள் மற்றும் பொது­மக்கள் மத்­தியில் கிராமம் மற்றும் நகரம் தோறும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது முக்­கி­ய­மாகும். இவைகள் எல்லாவற்றையும் இப்பத்தியில் எழுவது நடைமுறை சாத்தியமற்றது எனினும் ஒரே ஒரு அடிப்படையை புரிந்து கொண்டால் இவைகளை தடுத்துக் கொள்ள முடியும்.

பாலியல் விட­யத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்­பி­வி­ட­லா­காது என்பது தான் அந்த அடிப்படை. ஒருவர் எவ்வளவு நல்லவராகவும் நம்பிக்கையானவராகவும் இருக்கலாம் அது போல் உங்களுக்கு தெரியாத நிலையில் அவர் கெட்டவராகவும் இருக்கலாம். நல்லது, கெட்டது என்ற இரண்டு குணங்களும் ஒரே மனிதனிடம் ஒரே நேரத்தில் இருக்கலாம். யாரும் 100% நல்லவர் கிடையாது. சந்தர்ப்பம், சூழல் என்பவைகள் தான் ­நல்லவர், கெட்டவர் என்பதை தீர்மானிக்கிறது. சிம்பிளாக சொல்வதென்றால் ஒருவரின் நெட் ப்ரவுசிங்ஹிஸ்ட்றி (internet browsing history ) இன்னும் ஒருவருக்கு தெரியாத வரைக்கும் அவர் நல்லவர் தான் என்பது இன்றய உலகில் உள்ள நல்ல மனிதனுக்கான அளவு கோலாக இருக்கிறது. இந்த ஒன்றை புரிந்து கொண்டால் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும். இன்னும் ஒரு படி மேலே சென்றால் , இவர்கள் நமது உறவி­னர்கள், நன்­றாக நம்­முடன் பழ­கு­ப­வர்கள், சாது­வான மனிதர்கள் என்று சொல்லும் எல்லா நல்ல மனி­தர்கள் மீதும், அயலார், ரியுசன் மாஸ்டர், ஓதிக்கொடுக்கும் ஹஸரத், சமய குருக்கள் என இப்படியாக ஆள் வேறுபாடு இன்றி எல்லோர் மீதும் எமது கவனக் குவிப்பு அவ­சியமாகின்றது. அதே போன்று தன் உற­வுக்­காரர், அல்­லது அயல் வீட்டார், அல்­லது நண்­பர்கள் என எவராவது கொஞ்சம் மேல­தி­க­மாக, சந்தேகப்படும் படியாக பிள்­ளை­க­ளுடன் குலாவும் போது, தூக்கி அணைத்து முத்­த­மிடும் போது, விழிப்­பாகச் செயல்­படுதல் எதிர் காலத்தில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க உதவியாக இருக்கும் .

பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கான உபாயங்களாக இருக்கின்றன

உற­வினர் வீடு, அய­லவர் வீடு, நண்பர் வீடு என அழைப்­பிற்கோ அல்­லது தமது தேவையின் நிமித்­தமோ ஆண் பிள்­ளையையோ அல்லது பெண் பிள்­ளை­யையோ இரவை கழிப்­ப­தற்­காக அல்­லது உறங்கச் செல்லவதற்காக எக்காரணம் கண்டும் அனு­ம­திக்­காமல் இருப்பதே உசிதமானது. அதேசமயம் வீட்டில் இடம்­பெறும் விசேட வைப­வங்­களின் போது அல்லது பிற­வீ­டு­களில் நடக்கும் வைப­வங்­களின் போது தம் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

பிள்­ளை­களுக்கு பிறர் வழங்கும் அன்­ப­ளிப்­புகள் (டொபி, சொக்லட், விளை­யாட்டுப் பொருட்கள்) மீது கணிப்பாக இருத்தல் வேண்டும் அதே போன்று இவற்றைப் பெற்­றோரின் அனு­மதி இன்றி பெற்­றுக்­கொள்ளக் கூடாது என்ற கண்­டிப்­பு­டனும் விளக்­கத்­து­டனும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதற்கு மேலதிகமாக குழந்­தை­க­ளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்­தாலும் முத­லா­வது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்­பாக தாயும்- பிள்­ளையும், தந்தையும் -பிள்ளையும் உறவு நெருக்­க­மா­ன­தாக இருக்க வேண்டும். ஏற்­க­னவே நன்­றாக பழ­கிய உற­வினர், நண்பர், அயலார் தம் வீட்­டிற்கு வந்­ததும் அவர்­களைக் காணப்­பி­டிக்­காது ஒழிந்து கொண்டால் அல்­லது பயந்தால், அல்­லது அழுதால் அவர்­களின் சிறு விளை­யாட்டுப் பேச்­சுக்கும் ஆத்­திரம் கொண்டால் அதன் அர்த்தம் அவர்கள் மூலம் விரும்­பா­த­தொன்றை பிள்ளை சந்­தித்­துள்­ளது, பிள்ளை பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை புரிந்து கொள்ள கூடியவர்களாக பெற்றோர் இருக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் எந்தப்பொந்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது என்ற கிராமிய தத்துவத்தை தெரிந்து கொண்டால் குறைந்த பட்சம் அவதானமாகவாவது இருப்பது தான் துஷ்பிரயோகங்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான உரிய வழியாக தென்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து கொஞ்சம் மேலதிகமாக அவதானமாக இருப்பதும் அதற்கேற்ப கண்காணிப்புக்களை மேற்கொள்வதுமே காலத்தின் தேவையாகவும் உள்ளது. இது ஒன்றுதான் வளரும் பிள்ளைகளை இவ்வாறான ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியுமான மிகச்சிறந்த வேலியாக இருக்கிறது

இப்பொழுது சொல்லுங்கள் உங்கள் குழந்தைகள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானவர்களாக இருக்கிறார்கள் என்று..

சிறுவர்களை பாதுகாப்போம் அவர்கள் வாழ்வதற்கு நல்லதொரு சூழலை ஏற்படுத்துவோம்.

Dr PM.Arshath Ahamed
MBBS, MD PEAD
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை
சம்மாந்துறை.

பிற் குறிப்பு : The untochables


இது உலகப் புகழ்பெற்ற புகைப்படம். சிறுவர்கள் எல்லாம் யார் யாரால் துன்புறுத்தப்படுகிறார்கள், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகின்றன ஒரு ஆவணம்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe