Ads Area

இடி, மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது.

இலங்கையில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து பார்க்கலாம். 

இடியின்போது 2 காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.


திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறியாகும். அதனை உணர்ந்த உடன், உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது. தங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்து கொள்வது மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும்.

ஆனால், தரையோடு, தரையாக படுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் அதன் தாக்கம் ஊடுருவும். முடிந்தவரை தரையோடு நேரடி தொடர்பு குறைவாக இருக்கும் வகையில், குதிக்கால்கள் தரையில் படாமல் குனிந்து அமர்வதே மிக சிறந்த தற்காப்பு முறையாகும்.

கால்கள் ஒன்றோடு, ஒன்று இடிக்காத வண்ணம் அமர வேண்டும். ஒரு வேளை இடி, மின்னலின் போது நீங்கள் மரங்கள் அடர்ந்த வனம் போன்ற பகுதியில் இருந்தால் உயரம் குறைந்து, அடர்த்தியாக பரவி வளர்ந்திருக்கும் செடிகளை கூடாரமாக பயன்படுத்தலாம். திறந்த வெளியில் இருக்கும் போது உயரமான இடத்தை காட்டிலும் தாழ்வான இடத்தில் இருப்பதே பாதுகாப்பானது. கட்டிடத்திற்கு வெளியே இருப்பதை காட்டிலும் உள்ளே இருப்பதே சிறந்தது. 

இடி, மின்னலின் போது நிச்சயம் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் இருக்கக் கூடாது. மேலும், கொடிக்கம்பம், ஆன்டனா போன்றவற்றிக்கு அருகே நிற்க கூடாது.


குதிரையேற்றம், இருசக்கர வாகன பயணம், மொட்டை மாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற கூடாரங்களில் தங்கக்கூடாது. மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது. மின்சாரத்தில் இயங்கும் ஹேர் டிரையர், மின்சார பல் துலக்கிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும்.

மின்னல் ஏற்படும் போது செல்போன், தொலைபேசியை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது. உயர் அழுத்த மின் தடங்கள், இரும்பு பாலங்கள், செல்போன் கோபுரங்ளுக்கு அடியில் நிற்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். போதிய விழிப்புணர்வோடு இருப்பதே மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து காக்கும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe