பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால், குற்றவாளிகளுக்கு 21 நாள்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில், ஆந்திராவில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் தெலங்கானாவில் திஷா என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு எரித்துக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமான 4 குற்றவாளிகளை போலீஸார் என்கவுன்டர் செய்தனர். இந்த நிலையில், ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளி தூக்கிலிடப்படுவார்.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது. இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், ``நிர்பயா பெயரில் சட்டம் இயற்றியுள்ளோம். ஆனால், நிர்பயா கொல்லப்பட்டு 7 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை அந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடவில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிப்பதே சமூகத்துக்கு நல்லது'' என்றார்.
விகடன்.