இஸ்லாம் குறித்து சர்ச்சை பேஸ்புக் பதிவு; சவுதியில் கைதான இந்தியரை மீட்க இஸ்லாமியர்கள் உதவி.
கர்நாடகாவில் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் பங்கேரா. இவர் சவுதி அரேபியவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரின் பெயரில் இருக்கும் பேஸ்புக் கணக்கில் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை இடித்து ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், சவுதி பட்டத்து இளவரசரை விமர்சித்தும் பதிவு போடப்பட்டிருந்ததாகக் கூறி அவர் அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரின் வேலையும் பறிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியானது. மங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மத வன்முறையை தூண்டும் விதமாக அவர் பதிவு போட்டதாகவும், அதனாலே மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் என்று ஹரிஷ் பங்கேராவின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும், மெக்கா, சவுதி மன்னர் பற்றிய பதிவுகளை ஹரிஷின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி யாரோ பதிவிட்டுள்ளதாகவும், தவறாக எனது கணவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் ஹரிஷின் மனைவி கூறுகிறார்.
இது தொடர்பாக உடுப்பி சைபர் கிரைம் போலீசிடமும் அவர் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, அந்த பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டது. எனினும், மெக்கா பற்றிய பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் வைரலாக பரவி வருகின்றன.
ஹரீஷ் கைதான சம்பவம் வெளியுறவுத் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தூதரக ரீதியாக இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, உடுப்பியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் சவுதியில் உள்ள தங்களது நண்பர்களை வைத்து ஹரிஷை சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல, சவுதியில் உள்ள இந்து அமைப்புகளும் ஹரிஷை விடுவிக்க, முயன்று வருகின்றன.