Ads Area

கற்பழிக்கும் காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் - அமிதாபச்சன் மனைவி ஆவேசம்.

ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழித்துக் கொன்று, எரிக்கப்பட்ட சம்பவம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என ஜெயா பச்சன் ஆவேசமாக குறிப்பிட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளுக்கு விரைவில் அதிகபட்சமான தண்டனை வழங்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் மீது பேசிய சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என சில உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்தார்.

இதற்காக புதிய சட்டம் தேவையில்லை. அரசியலில் துணிவான எண்ணம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுடன் மனநிலை மாற்றமும் ஏற்பட்டால் இதைப்போன்ற சமூகத்தீமைகளை களைந்து விடலாம். 

கீழ்கோர்ட்டில் தண்டனை விதிக்கப்படும் கற்பழிப்பு குற்றவாளிகள் பின்னர் மேல் முறையீடு, கருணை மனு ஆகிய நடைமுறைகளில் தப்பிக்க வழி தேடுகின்றனர். இவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி., ஜெயா பச்சன், ‘ஐதராபாத்தில் அந்த பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு முந்தைய நாளும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனம் காட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

உங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால் தீர்ப்பளிக்கும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து விடுங்கள். பாதுகாப்பு அளிக்க தவறியவர்களும் குற்றவாளிகளும் மக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும். அவர்களை என்ன செய்ய வேண்டும்? என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

இதற்கு அரசாங்கம் சரியான பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். நான் சொல்வது சற்று முரட்டுத்தனமாக இருந்தாலும், கற்பழிப்பு சம்பவங்களில் தொடர்புடையை குற்றவாளிகள் பொதுவெளியில் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பது மட்டுமே சிறந்த தீர்ப்பாக அமையும் என்று ஜெயா பச்சன் கூறியதும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திகைப்படைந்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe