சென்னை கே.கே. நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி (38) இவரது மனைவி சுமித்ரா (35) நேற்று முன் தினம் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை சுத்தம் செய்த சுமித்ரா, வாசலில் இருந்த ஷூக்களை நகர்த்தி வைத்துள்ளார். அப்போது ஷூவில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று சுமித்ராவின் கையில் கடித்துள்ளது.
உடனே சுமித்ரா வலியால் துடித்து அலறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பழனி ஆம்புலன்ஸ் மூலம் சுமித்ராவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ரா சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தற்போது மழைக்காலம் என்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அவற்றின் இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்ந்து வீட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அவ்வாறு வரும் விஷ பூச்சிகள் ஷூ, செருப்புகளில் தங்கிக் கொள்ளும். அதனால் அவற்றை பயன்படுத்தும் போது கவனமாக கையாள வேண்டியது அவசியம்.