Ads Area

அரசனை நம்பி புரிசனை இழந்த நிலையில் வியாழேந்திரன்...!

மொட்டுவின் சந்தர்ப்பவாதமறிய வியாழேந்திரன் சிறந்த உதாரணம். அரசனை நம்பி புரிசனை இழந்த நிலையில் வியாழேந்திரன்...!

மொட்டுவை நம்பி நடுத்தெருவுக்கு வந்தவர்களில் முதன்மையானவராக வியாழேந்திரனை குறிப்பிடலாம். கடந்த 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது தனது கட்சியான த.தே.கூவிலிருந்து விலகி மஹிந்த அணியை ஆதரித்திருந்தார். அவ் வேளை அவருக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சே வழங்கப்பட்டிருந்தது. அவ் அமைச்சை அவர் முழுமையாக மென்று, சுவைக்க முடியாமல் போனது நாடறிந்ததே!

அந் நேரம் வியாழேந்திரன் போன்றோரின் ( அத் திட்டத்தோடு முஸ்லிம்களிலும் சிலர் சென்றிருந்தனர். ) பிரதான திட்டமாக அமைச்சை வைத்து பிரபலமடைவதே இருந்தது. த.தே.கூவானது அமைச்சுக்களை ஏற்காது தொடர்ந்தும் எதிர்க்கட்சி அரசியலையே செய்து வருவதால் தமிழ் மக்களிடம் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு போன்ற நோக்கிய தாகம் உள்ளது. தமிழ் மக்களின் இத் தாகத்தை அமைச்சின் மூலம் ஓரளவு நிவர்த்திக்க முடியும்.

அன்று அவர் எச்சிலூறி சுவைக்க கற்பனை கோட்டை கட்டியிருந்த அவரின் அமைச்சு பதை பதைக்க பறிபோயிருந்தது. தற்போது வழங்கப்பட்ட அமைச்சில் குறைந்தது இராஜாங்க அமைச்சையாவது வியாழேந்திரனுக்கு வழங்கி கைம்மாறு செய்திருக்க வேண்டும் மொட்டரசு. ஆனால், ஆயிரம் கற்பனையோடு வியாழேந்திரன் இருந்த போது மொட்டரசு எந்த குட்டி அமைச்சையும் அவருக்கு வழங்கவில்லை. பாவம் வியாழேந்திரன். அரசனையும் நம்பி புரிசனை இழந்த நிலையிலுள்ளார். மொட்டு ஆட்சி அமைத்த நாளிலிருந்து அவரின் சத்தத்தை கண்டுகொள்ள முடியாதுள்ளது.

அன்று மொட்டரசுக்கு வியாழேந்திரனின் உதவி தேவைப்பட்ட போது அமைச்சை வழங்கியிருந்தது. அவர்கள் உறுதியான அதிகாரத்தை பெற்றதும் தூக்கியெறிந்து விட்டார்கள். அன்று அமைச்சுக்கு தகுதியானவர், இன்று ஏன் அமைச்சுக்கு தகுதிபெறவில்லை என்பதை சிந்திக்கும் ஒருவர் மொட்டுவினரின் சந்தர்ப்பவாத அரசியல் பாணியை தெளிவுற அறிந்துகொள்ள முடியும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe