இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில், கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகம். அதாவது, 2017-ம் ஆண்டில், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 827 ஆக உயர்ந்தது. 2018-ம் ஆண்டில், 21 ஆயிரத்து 605 குழந்தை கற்பழிப்பு சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டன. இவற்றில் 21 ஆயிரத்து 401 சம்பவங்கள், சிறுமிகளையும், 204 சம்பவங்கள் சிறுவர்களையும் சார்ந்தவை. குழந்தை கற்பழிப்பு சம்பவங்களில் மராட்டிய மாநிலம் (2,832) முதலிடத்திலும், உத்தரபிரதேசம் (2,023) 2-ம் இடத்திலும், தமிழ்நாடு (1,457) 3-ம் இடத்திலும் உள்ளன.
குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுத்த சம்பவங்களின் எண்ணிக்கை 781 ஆகும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. காப்பகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், 30 சதவீதம் அதிகரித்துள்ளன.
Thanks - Seithy.com
இது தொடர்பான மற்றுமொரு செய்தி - https://gulfnews.com/world/asia/india/average-80-murders-91-rapes-daily-in-india-in-2018-ncrb-data-1.1578572333397?fbclid=IwAR0dzPfskp_v6V-n-2d9bJrrWZQdSSN5KlQ26oRkt0QemMfWhukdUt78m-A