Ads Area

ஹஜ்ஜுக்கான செலவை 6 லட்சத்தை விட குறைக்க முடியாது.

ஹஜ்ஜுக்கான செலவை 6 லட்சத்தை விட குறைப்பது கடினம் என ஹஜ் குழு உறுப்பினர் அல்ஹாஜ் அஸ்செய்யத் அஹமத் நகீப் மௌலானா மீள்பார்வை பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார் மீள்பார்வை பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்,

ஹஜ்ஜுக்கான கட்டணம் கூடிக் குறைவதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த முடியுமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஹஜ்ஜுடைய விடயம் நிறைவாகவும் குறைந்த கட்டணத்திலும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்பதே பிரதமரின் கருத்தாக உள்ளது. ஆனால் ஹஜ்ஜுக்கான கட்டணத்தை அதிகளவில் குறைப்பதென்பதும் கடினம்தான். ஏனெனில், அங்கு முஅல்லிம் கட்டணம், டிக்கட் கட்டணம், ஹஜ் வரிக் கட்டணம் என்றெல்லாம் உள்ளன. இம் மூன்று கட்டணங்களுமே கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபா வருகிறது. இதுதவிர ஒரு மாத காலத்திற்கான உணவு, தங்குமிட வசதிகள், ஹோட்டல் கட்டணங்கள் எல்லாம் செலுத்தப்பட வேண்டும். இவையனைத்துக் கட்டணங்களையும் கூட்டிப் பார்க்கின்ற போது 6 லட்சத்தை விட குறைவாக ஹஜ்ஜுக்கான செலவை குறைத்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

இதுவல்லாமல் வசதிபடைத்தவர்கள் மக்கா, மதீனா நகரங்களில் சிறந்த ஹோட்டல்களைப் பதிவுசெய்து ஹஜ் கடமையைச் செய்வார்கள் என்றால் கட்டணம் இன்னும் அதிகமாகும். எனவே ஹஜ் கடமையை எப்படிச் செய்யத் திட்டமிடுகிறோமோ அதற்கமைய கட்டணங்களும் கூடிக் குறையும். குறைவான கட்டணத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்வதாயின் மக்கா பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை நாட வேண்டும். மக்கா பள்ளிவாசலுக்கு அருகாமையில் ஹோட்டல்களைப் பதிவதாக இருந்தால் கட்டணங்கள் இன்னும் அதிகமாகும். ஹஜ் செய்பவர்கள் தான் இவற்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய முடிவுகளுக்கமையவே கட்டணங்களும் அமையும்.

எனக் குறிப்பிட்டார்.


அல்ஹாஜ் அஸ்செய்யத் அஹமத் நகீப் மௌலானா அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகும், மேலும் இவர் முஸ்லிம் சமூக, அரசியல் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் அரைநூற்றாண்டு கால அனுபவங்களைக் கொண்டுள்ளார். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe