Ads Area

முஸ்லிம் சமூகம் இனியும் விடக்கூடாத தவறு.

கட்டுரை - அப்துல்லாஹ் மர்லின்.

இலங்கை முஸ்லிம்கள் மிக முக்கியமான காலகட்டத்தை அடைந்துள்ளனர். அதன் காரணத்தினால் தமது செயற்பாடுகளை மிகுந்த அவதானத்துடனும் தூரநோக்குடனும் அமைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இச்சமூகத்தினருக்கு முன்பாக உள்ளது.

நாட்டுப் பற்றும் சேர்ந்து வாழ்தலும்

இந்நாட்டில் 1200 வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனித்துச் செல்லவோ ஒதுங்கி வாழவோ பிரிந்து செல்லவோ முயற்சி செய்தது கிடையாது. ஆரம்ப காலம் தொட்டு இந்நாட்டு பெரும்பான்மை மக்களுடன் தனித்துவம் பேணியபடி சேர்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.

அதேநேரம் இந்நாட்டுக்காக அளப்பரிய சேவைகளை செய்துள்ள முஸ்லிம்கள் தான் இலங்கையை உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தனர். அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு இந் நாடு உட்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு படைகளுடன் இணைந்து முஸ்லிம்கள் நாட்டுக்காகப் போராடி உயிர்த் தியாகமும் செய்துள்ளனர். அத்தோடு இந்நாட்டு மன்னர்களதும் பெரும்பான்மை மக்களதும் நம்பிக்கைக்குரியவர்களாக விளங்கிய முஸ்லிம் சமூகத்தினர் மன்னர்களது அரசவைகளில் கூட முக்கிய பதவிகளை வகித்துள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியரிடமிருந்து 1948 இல் இந்நாடு சுதந்திரம் பெற்ற போது கலாநிதி டி.பி ஜாயா போன்ற முஸ்லிம் தலைவர்கள் பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து வாழ்வதையே தெரிவுசெய்தனர். அதன்படி நாட்டின் இரண்டு பிரதான பெரும்பான்மை அரசியல் கட்சிகளிலும் முஸ்லிம்கள் அங்கம் வகித்து வந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் 1984, 85 வரையும் தனி அரசியல் கட்சி அமைப்பது குறித்து முஸ்லிம்கள் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் நாடு சுதந்திரமடைந்த      சொற்ப காலத்திற்குள்ளேயே தமிழ் தலைவர்கள் தங்களுக்கென அரசியல் கட்சிகளை அமைத்துக் கொண்டனர்.

இந்நாட்டு முஸ்லிம் மக்கள் எப்போதும் பெரும்பான்மை மக்களோடும் அம்மக்களின் தலைவர்களோடும் இணைந்தே செயற்பட்டு வந்தனர். அதனால் பெரும்பான்மை மக்களதும் ஆட்சியாளர்களதும் அபிமானத்திற்குரிய மக்களாக முஸ்லிம்கள் விளங்கி வந்தனர். இதன் பயனாக சவூதி அரேபியாவில் கூட முஸ்லிம்களுக்கு வழங்கப்படாத உரிமைகளும் சலுகைகளும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு அனுபவித்து வருகின்றார்கள்.

முஸ்லிம் கட்சிக்கு வித்திட்ட ஜே.ஆர்

ஆனால் தமிழ் இளைஞர்களின் ஆயுத ரீதியிலான கிளர்ச்சியின் விளைவாக 1984, 1985 களாகும் போது முஸ்லிம்களும் பாதிக்கப்படத் தொடங்கினர். அவர்களது ஆயுதம் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டது. அச்சமயம் நாட்டின் தலைவராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கத் தவறினார்.

இது தொடர்பில் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஜே.ஆரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய போது, உங்களது விடயங்கள் தொடர்பில் தமிழ் தலைவர்களுடன் பேசிக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து தான் கவுன்சில் ஒப் முஸ்லிம் என்ற அமைப்பு கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களுடன் சென்னைக்குச் சென்று தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. 

அதேநேரம், ஜே.ஆர் ஜயவர்தன சர்வகட்சி மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து முன்வைக்கப்படவில்லை. அவர் தலைமையிலான அரசாங்கத்தில் கூட எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் இருந்தும் இக்குறைபாட்டை நிவர்த்திக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வகட்சி மாநாட்டில் அரசியல் கட்சிகள் மாத்திரமே பங்குபற்ற முடியும் என அவர் நிபந்தனை விதித்ததால் முஸ்லிம்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகினர்.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். ஜே.ஆரின் இச்செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கும் அரசியல் கட்சி தேவை என்ற நிலைமையை உருவாக்கியது.

இந்தப் பின்புலத்தில்தான் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக 1986 இல் பிரகடனப் படுததினார். அவர் இக்கட்சியை அமைத்தது முதல் வபாத்தாகும் வரையும் அதன் தலைவராக இருந்தார். என்றாலும் பெரும்பான்மை சமூகத்தினர் பகைமை மனப்பான்மையில் நோக்கும் வகையில் அவர் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. 1988 ஜனாதிபதித் தேர்தலில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு ஆதரவு நல்கிய மர்ஹும் அஷ்ரஃப், 1994 இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க – சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீ ல.சு.கட்சிக்கு ஆதரவு நல்கினார்.

அவர் 2000 செப்டம்பரில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த பின்னர் கட்சியின் தலைமையை தற்போதைய தலைவரான ரவூப் ஹக்கீம் ஏற்றார். அதனைத் தொடர்ந்து 2001 முதல் 2004 வரையான காலப்பகுதியில் இக் கட்சி பல துண்டுகளாக திட்டமிட்ட அடிப்படையில் பிரிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டது. அதனை யார், எவ்வாறு, எந்த அடிப்படையில் செய்தனர் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் நன்கறிவர். அது குறித்து கலந்துரையாடப்பட வேண்டிய இடம் இதுவல்ல.

மக்களிடமிருந்து தூரமான ஐ.தே.க 

ஆனாலும் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ.ல.மு.கா 2005, 2010, 2015, 2019 ஆகிய எல்லா ஜனாதிபதி தேர்தல்களிலும் ஐ.தே.க வுக்கே ஆதரவு நல்கியது. அவற்றில் 2015 தவிர்ந்த எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ.தே.க வெற்றிபெறவில்லை. அதிலும் 2015 முதல் 2019 வரையான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி, ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் ஐ.தே.க.வை பெரும்பான்மை மக்களிடமிருந்து தூரப்படுத்தியது. ஐ.தே.க அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் போது தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதம் பெரும்பான்மை மக்களிடம் பிழையான பார்வையைத் தோற்றுவித்தது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.10.26 அன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அமைச்சரவையையும் பதவி நீக்கினார். ஆனால் 2015 பதவிக்கு வந்ததும் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு ஏற்றவகையில் மேற்கொண்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தைப் பயன்படுத்தி 52 நாட்களில் மீண்டும் அவர் பிரதமரானார். ஆனால் இலங்கையில் எந்தவொரு பிரதமரும் செய்யாத இச்செயலை பெரும்பான்மை மக்கள் அங்கீகரிக்கவில்லை. 

இதேவேளை இந்த 52 நாட்களில் ரணிலையும் அவரது அரசாங்கத்தையும் பாதுகாப்ப தில் ஐ.தே.க வின் சிங்கள தலைவர்களை விடவும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர். இதன் நிமித்தம் இவர்கள் நடந்து கொண்ட விதம், கூட்டங்களில் ஆற்றிய உரைகள், நீதி மன்றங்கள் சென்ற விதம் என்பன பெரும்பான்மை மக்களை விழிப்படையச் செய்தன.

மக்கள் ஆணைக்கு முன் 19வது திருத்தம்

இருந்த போதிலும் இந்நிலைமைகளைச்  சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாத தமிழ் முஸ்லிம் கட்சிகள், ‘சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியாக முடி யாது’, ‘சிறுபான்மை ஆதரவு இன்றி ஆட்சியமைக்க முடியாது’. ‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி அபேட்சகர்’ என்ற வசனங்களை கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரிதும் பயன்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டனர். இப்பிரசாரங்களை நம்பி வடக்கு, கிழக்கில் 90 வீதம் தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ.தே.க.வின் ஜனாதிபதி அபேட்சகர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். அப்படியிருந்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி அபேட்சகர் கோட்டாபய ராஜபக்ஷ தான் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அவருக்கு மக்கள் அளித்த ஆணையை ஏற்று ரணிலும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலகிச் சென்றனர். ஆனால் 2018.10.26 இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக அரசியமைப்புக்கான 19வது திருத்தத்தைப் பயன்படுத்தியது போன்று இச்சமயம் அவர்கள் பயன்படுத்தவில்லை. ஏனெனில் மக்கள் ஆணை மிகவும் தெளிவாக அமைந்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும் களநிலவரமும் தெளிவாகக் கூறியும் கூட தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதனை ஒரு பொருட்டாகக் கூட நோக்கவில்லை. 159 இலட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள ஒரு தேர்தலில் சுமார் 40 இலட்சம் வாக்குகள் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக அமைய முடியுமா? அதற்கான சூழல் நாட்டில் காணப்படுகிறதா? என்பதை இவர்கள் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை.

பெரும்பான்மையினரை ஐக்கியப்படுத்தியவர்கள்

ஆனால் இவர்கள் மேற்கொண்ட பிரசாரமும் இவர்களது செயற்பாடுகளும் பெரும்பான்மை மக்களை ஐக்கியப்படுத்தியது. இதன் ஊடாக சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி ஜனாதிபதியை எம்மால் உருவாக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் தொழில்புரியும் வாக்காளர்கள் கூட வந்தனர். அதேபோன்று எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீ.ல.பொ.பெரமுன ஈடுபட்டுள்ளது. அதுவும் அவர்களுக்குச் சாத்தியமில்லாத காரியமுமல்ல. ஏனெனில், 2010 பொதுத் தேர்தலில் 144 ஆசனங்களை ஐ.ம.சு.மு வெற்றி பெற்றமை தெரிந்ததே.

இருந்தும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் எடுத்த நிலைப்பாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்லது தோல்வி, அதன் விளைவாக சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சீரமைத்து நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் மீளாய்வு செய்யாது ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யலாம் என முஸ்லிம் கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன. ஆனால் கள நிலவரங்களை ஆய்ந்தறியாது மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பது ஆரோக்கியமானதல்ல.

அதனால் முஸ்லிம்கள் மிகவும் கவனமாகவும் தூர நோக்கோடும் சிந்தித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் விட்ட தவறை எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒரு போதும் விட்டு விடக்கூடாது. ஏனெனில் கடந்த தேர்தலில் விட்ட தவறினால் முஸ்லிம்கள்தான் பெரும் பான்மையினரால் பிழையாக நோக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையி லிருந்து மீட்சிபெற வேண்டியது காலத்தின் அவசியமானதாகும். அதுவே சமூகத்தின் சுபீட்சத்திற்கும் மேம்பாட்டுக்கும் துணை புரியும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe