( மாளிகைக்காடு நிருபர் நூருல் ஹுதா உமர் )
தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார். அவரை வைத்து அனுதாப அலைக்கு முயன்று தோற்று போனார்கள். நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள். இப்போது இனவாதம் இல்லாமலாகி நாடு நிம்மதியாக உள்ளது. மக்களை நிம்மதியாக வாழ வழியமைக்காமல் மீண்டும் வந்து பிரதமராக்க போகின்றோம் என்று மீண்டும் பொய்யான மாய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்றபோது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,
எங்களிடம் உண்மையும் சத்தியமும் இருக்கிறது. சோதனைகளை தாண்டி பயணித்த தேசிய காங்கிரசை நோக்கி இப்போது மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் இப்போதுதான் உண்மைகளை அறிந்து கொண்டு நடக்க ஆரம்பித்துள்ளார்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் கடந்தகாலங்களில் ஜனாதிபதிகள் தெரிவாகிய வரலாறு இருக்கிறது. எம் மக்களை பிழையாக வழிநடத்தி விட்டு பின்கதவால் அரசில் வந்து இணைத்துக்கொண்ட தலைவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 2005,2010 ஆண்டுகளில் இவர்கள் பின்கதவால் வந்து அமைச்சு பதவிகளை பெற்றதை நாம் கண்ணால் கண்டோம். எங்களிடம் நேர்மை இருக்கிறது அதனால் சத்தியம் வென்றிருக்கிறது. உண்மை நிலையை அறிந்து மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் இப்போது மீண்டும் ஒரு பிரதமர் புரளியுடன் வந்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் , முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சமூக சேவை, கல்வி, கலை, கலாசார, இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற பணிகளுக்காக துறைசார் பிரமுகர்கள் சிலர், மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.