(அபு ஹின்சா / சர்ஜுன் லாபீர் )
கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் மருதமுனை பிரதேசத்தில் மேட்டுவட்டை வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து இருந்தார்.அந்த வீடமைப்பு திட்டம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இன்னும் 75 வீடுகள் கடந்த 10 வருட காலமாக மிகவும் சீரழிந்த நிலையில் இருக்கின்றது. இது சம்மந்தமாக அரசாங்க அதிபரிடம் நான் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதே போன்று கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திலும் சில வீடுகள் காணப்படுகின்றது. அதற்கு அப்பால் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் சவூதி அரசாங்கத்தினால் நிதிவழங்கப்பட்டு அமைக்கப்பட்ட திட்டம் ஆகும். இதுவும் இன்னும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில் காணப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் நேற்று (22) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் பேதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவ் விவாதத்தில் உரையாற்றிய அவர்,
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சு என்பது இந்த நாட்டில் மிகவும் முக்கியமானதோர் அமைச்சு மனிதனின் அன்றாட அடிப்படை தேவைகளில் ஒன்றான வீடமைப்பு விடயங்களை கவனிக்கும் ஒரு அமைச்சு ஆகும்.அந்தடிப்படையில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்டத்தில் சுனாமியின் பின்பு அரசும், பல வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களும் வீடமைப்பு விடயங்களை இணைந்து செயற்படுத்தி வந்தது.
அதே நேரம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெறுகின்ற போது இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் விருத்தியடைகின்ற வாய்ப்பு உண்டாகும்.எனவே இந்த இடத்தில் கெளரவ பிரதமர் அவர்களையும் இந்த அரசாங்கத்தையும் நான் வேண்டிக்கொள்வது கெடஒயா நீர்ப்பாசன திட்டத்தை தொடர்ந்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்று நான் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூகம் சார்பாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிநபர் பிரேரணைகளை சமர்பித்துள்ளார்கள்.கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் 21வது,22வது அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்மந்தமான பிரேரணையை இந்த சபையில் சமர்ப்பித்து உள்ளார்.அரசியலமைப்பில் உள்ள வெட்டுப்புள்ளி 5 சதவீதத்தை 12.5 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட விடயம் அல்ல இது இந்த நாட்டில் சிறு கட்சிகளாக இருக்கின்ற ஜே.வி.பி,ஹெலஉறுமய,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பல சிறுகட்சிகள் தங்களுடைய பாராளுமன்ற ஆசனங்களை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முறையாகும். இதனை இன்று சிலர் இனவாத ரீதியாக எங்களுடைய பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் கொண்டுவந்தார் என பிரச்சாரம் செய்து சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி இவ்வாறான நாட்டுக்கு நன்மையாக உள்ள சட்டங்களை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இந்த விகிதாசார தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இந்த நாட்டின் ஆட்சியில் சிறு கட்சிகள் ஜனநாயக ரீதியாக பங்குபற்றி உள்ளார்களே தவிர ஆட்சியை கவிழ்ப்பதற்கோ! அல்லது ஆட்சியை மிரட்டுவதற்கோ! எந்த சந்தர்ப்பத்திலும் தங்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமைகளை பயன்படுத்தவில்லை. எனவேதான் இவ்வாறு மக்கள் மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இந்த நாட்டின் அபிவிருத்தியும் சமாதானமும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்.
அது மட்டும் அல்ல இன்று பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ள சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் புலிகளின் தளபதியாக இருந்த கருணா அம்மான் அவர்கள் மிகக் கேவலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாத பேச்சுக்களை அப்பட்டமாக பேசித்திரிகின்றார்.தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை மிகவும் கேள்விக்கு உட்படுத்துகின்ற இவ்வாறான கீழ்த்தரமான பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் வெறுப்பு சட்டத்தை இந்த பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும்.
இவையெல்லாம் சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் வாக்குகளை கூட்டுகின்ற தந்திரோபாய நடவடிக்கையாக நாங்கள் பார்க்கின்றோம்.
இதனை தயவு செய்து ஆட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் கைவிட வேண்டும் சிறுபான்மை சமூகத்தை அரவணைத்துச் செல்ல வேண்டும்.இந்த நாடு 30 வருட காலமாக யுத்தத்திற்கு முகம் கொடுத்த நாடு எனவேதான் இவ்வாறான சூழ்நிலையில் இருக்கின்ற எஞ்சிய காலத்தில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் பொருளாதாரத்தில், உச்ச நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இன்று எல்லோர் மத்தியிலும் இருந்து கொண்டு இருக்கின்றது. எனவேதான் இவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு சிறுபான்மை மக்களை அரவணைத்துச் செல்லுகின்ற சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளையும் அவர்களின் அபிலாசைகளையும் ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு சூழ்நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.