(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளிலும் கட்டாயம் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளின் சுத்தம், சுகாதாரம் கட்டாயம் பேணப்பட வேண்டும் என்றும் அறுக்கப்படுகின்ற ஆடு, மாடுகள் முறையாக கொள்வனவு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்முனை மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வரும் இறைச்சிக்கடைகளில் அளவை, நிறுவையில் மோசடி இடம்பெறுவதாகவும் சுத்தம் பேணப்படுவதில்லை எனவும் திருட்டு மாடுகள் அறுக்கப்படுவதாகவும் நுகர்வுக்குதவாத இறைச்சிகள் விற்கப்படுவதாகவும் இன்னும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் பொது மக்களிடம் இருந்து நிறைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில், அனைத்து இறைச்சிக் கடைகளிலும் கட்டாயம் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்விறைச்சிக் கடைகளின் சுத்தம் முழுமையாக பேணப்பட வேண்டும் என்பதுடன் மனித நுகர்வுக்குதவாத இறைச்சிகள் விற்பதையும் கள்ள மாடுகள் அறுப்பதையும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.