Fauzer Mahroof
தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவதினால் 2000 திசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.
1. ஞானச்சந்திரன்,
2. சாந்தன்,
3. ஞானபாலன் ரவிவீரன்,
4. செல்லமுத்து தெய்வகுலசிங்கம்,
5. வில்வராஜா பிரதீபன்,
6. சின்னையா வில்வராஜா,
7. நடேசு ஜெயச்சந்திரன்,
8. வில்வராஜா பிரசாத்
இராணுவத்திடம் அகப்பட்ட பொன்னுத்துரை மகேஸ்வரன்மட்டும் கொடூரம் மிக்க மிருசுவில் படுகொலையின் ஒற்றைச் சாட்சியாக அவர் தப்பி வந்தார். மகேஸ்வரனின் வாக்குமூலங்களை அடுத்தே, கொலை செய்யப்பட்ட அந்த மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. முதற்கட்டமாக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. அத்துடன் அங்கு முதன் முதலில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்தும் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. உண்மையில் அந்தப் பெண்ணுக்கு நடந்த அநீதியை நீதிமன்றத்தினால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்தப் படுகொலையில் மூன்று பதின்ம வயதுச் சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவனான வில்வராசா பிரசாத்தும் அடங்கி இருந்தனர் . அத்துடன் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 2015, ஜூன் 25ஆம் திகதி அன்று இப் படுகொலை தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டது. எட்டுத் தமிழ் மக்களையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தவர் என்ற குற்றசாட்டில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு மட்டும் மரண தண்டனையை கொழும்பு நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்திருந்தது.
சுனில் ரத்நாயக்க அவர்களுக்கு தண்டனை அறிவிக்க பட்ட நாளில் அவரை தேசிய வீரராக கொண்டாடும் சமூக தளங்கள் உருவாக்க பட்டன. கையெழுத்து வேட்டைகள் நடத்தப்பட்டன. கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த தளங்கள் கோத்தபாயா ராஜபக்சே அவர்களுக்கு வாக்கு சேகரித்தன
கடந்து போன பௌர்ணமி நாளில் எந்த பொது அறிவிப்பும் இன்றி சுனில் ரத்நாயக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார் . இலங்கை நீதித்துறையை ராஜபக்சே குடும்பம் மீண்டும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.ஒரு மரண தண்டனை குற்றவாளி வெறும் 4 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார் ஆனால் படுகொலையால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் 19 ஆண்டுகளாக பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அல்லல்படுகின்றன.
-இனமொன்றின் குரல்