முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வில்பத்து காடழிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியமர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராக சுற்றாடல் நீதிக்கான நிலையம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் பெயரிடப்பட்டுள்ளனர்.
வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் 2388 ஏக்கரை அழித்ததன் ஊடாக பாரிய சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி மஹிந்த சமயவர்தன தீர்ப்பை அறிவிக்க விருப்பம் தெரிவிக்காமையினால் மனுவை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீர்மானித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகியிருந்தார்.