சமீபகாலமாக ஆடம்பரத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு செய்யும் செலவில் ஒரு சொந்த வீட்டையே வாங்கிவிட முடியும்! நுகர்வுக் கலாசாரத்தின் எல்லையில்லா உச்சத்தை எட்டும் ஆசையில் நடத்தப்படும் திருமணங்களின் முக்கிய நோக்கம் சமூக அந்தஸ்தை நிலை நிறுத்தும் அம்சமாகிவிட்டது.
திருமண நாளை ஒரு மறக்க முடியாத ஆடம்பரக் கொண்டாட்டமாக மாற்றுவதற்கு, ஆடம்பர மண்டபம், பிரம்மாண்ட விருந்து, மலைக்க வைக்கும் மேடை அலங்காரம், உடைகள், நகைகள், கேளிக்கை நிகழ்வுகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. இந்த ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு செய்யும் செலவில் ஒரு சொந்த வீட்டையே வாங்கிவிட முடியும்!
ஒரு திருமணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு படாடோபமாக நடத்தி கெத்து காட்டுவது என்பதில் இடைவிடாத போட்டாபோட்டி நடக்கின்றது. அதன் விளைவு, நடுத்தரவர்க்கத்து குடும்பத்தினர் சிலரை மீள முடியாத துன்பத்தில் தள்ளிவிடுகின்றது. வாழ்நாள் கடனாளியாக்கி விடுகின்றது.
50 வருடத்திற்கு முன்பு விரல்விட்டு எண்ணத்தக்க பணக்காரர்கள் வீட்டுத் திருமணங்களைத் தவிர, பெரும்பாலானத் திருமணங்கள் எளிமையாகவே நடந்தன. ஏழை குடும்பத்து திருமணங்கள் குறைந்த தொகைச் செலவிலேயே நடைபெற்றன அதே போல் எளிய நடுத்தர வர்க்கத்து திருமணங்கள் ஒன்று முதல் ஒன்றரை லட்ச செலவில் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி விடுகிறது.
பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் நகைகளுக்கான பணத்தை பெண் குழந்தை பிறந்தது முதல் சேமிக்கத் தொடங்கி விடுகிறார்கள்!
அந்தஸ்தை காட்டும் அம்சமாக இன்றைய திருமணங்கள் மாறிப்போனது. இதனால் சக்திக்கு மீறி செலவு செய்து, அடுத்த ஒரு சில மாதங்களிலேயே கடன் அழுத்தம் தாங்க முடியாமல் நோய்வாய்ப்பட்ட தந்தைகள், சித்தபிரமை பிடித்து மன நோயாளிகளானவர்கள், அவ்வளவு ஏன்...? திருமணம் முடிந்து சில நாட்களில் மரணத்திற்கு ஆளான தந்தை என என் அனுபவத்தில் நிறைய பேரை பார்க்கின்றோன்.
அந்த காலத் திருமணங்கள்
“43 வருடத்திற்கு முன்பு நடந்த என் திருமணத்தின் மொத்த செலவே வெறும் 150 ரூபாய் தான்! என் காதல் திருமணத்திற்கு ஒரு நண்பன் திருமண அழைப்பிதழ் அச்சடித்து தந்தான். மற்றொரு நண்பன் மலர்மாலை வாங்கி வந்தான். நான் மதிக்கும் பெரியவர்கள், தோழர்கள் புடை சூழ மாலை மாற்றிக்கொண்டோம். வந்தவர்களுக்கு இனிப்பு, காரம், தேநீர் அவ்வளவு தான் என் செலவு!” என்கிறார் பிரபல எழுத்தாளர் ஜீவபாரதி!
அந்த காலத்தில் திருமணங்கள் வீடுகளிலேயே கூட நடப்பது உண்டு. உற்றார், உறவினர்கள் குடும்பத்துடன் முன் கூட்டியே வந்து விடுவார்கள். வாழை தோரணம் கட்டுவது, சமைப்பது, பரிமாறுவது எல்லாமே குடும்பத்தினரும், உறவினர்களும் இணைந்தே செய்வார்கள். ஆளாளுக்கு வேலைகளை இழுத்துப் போட்டு செய்வார்கள். வெளிஆட்கள் வேலைக்கு வருவதில்லை. கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள் பக்கத்து வீடுகளிலும் தங்க வைக்கப்படுவார்கள்!
நமது தேசத் தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள் மிக எளிமையாகவே நடந்தன. மகாத்மா காந்தியின் மகனுக்கும், ராஜாஜியின் மகளுக்குமான கல்யாணம் மிக எளிமையாக நடந்தது. காந்தி தன் கையால் நெய்த கதர் ஆடையை அவர்களுக்கு பரிசளித்தார். நேருவின் மகள் இந்திராகாந்திக்கும், பெரோஸ்காந்திக்குமான திருமணம் கூட எளிமையாக நேருவின் அலகாபாத் ஆனந்தபவனிலேயே நடந்தது. இந்திராவின் பிள்ளைகள் ராஜீவ்காந்திக்கும், சஞ்சய்காந்திக்குமான திருமணங்கள் கூட ஆடம்பரமாக நடந்ததாக சொல்ல முடியாது. இந்திராகாந்தி தன் தந்தை நேரு சிறையில் நெய்த கதர் சேலையை தன் மருமகள் மேனகாவிற்கு பரிசாகத் தந்தது நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. இதே போல அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்தின் திருமணமும் மிக எளிமையான முறையில் தான் நடந்தது. இதே போல நடிகர் திலகம் சிவாஜி திருமணம் சுவாமி மலையில் எளிமையாக நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமணம் திருப்பதியில் எளிமையாக நடந்தது. பொதுவாக 1980-ம் ஆண்டு வரையில் நடந்த திருமணங்கள் பெரும்பாலும் எளிமையாகவே நடந்தன.
மாற்றங்கள் அரங்கேறின
1990-ம் ஆண்டுகளில் தாராளமயம், உலகமயமாக்கல் போன்றவை அறிமுகமாயின. பணப்புழக்கமும் மக்களிடையே அதிகரித்தது. அதன் பிறகு தமிழகம் கண்ட முதல் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தான்! தமிழகமே வாய் பிளந்து அண்ணாந்து பார்த்த அந்த திருமணத்தை ஆடம்பரத் திருமணங்களுக்கான தொடக்க புள்ளியாக கருதலாம். அந்த திருமணம் அன்றைக்கு கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டது. ஏனெனில், ஆடம்பரம் என்பது அன்று ஒரு சமூக குற்றமாக கருதப்பட்டது. அதனால் தான் ஒரு ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களில் அதுவும் முக்கியமான ஒன்றாயிற்று. ஆனால் இன்றோ, ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம், தினம் பல ஆடம்பரத் திருமணங்களை சமூகம் பார்த்துப்பார்த்து, அவை இயல்பான ஒன்றாகிவிட்டது. எனவே, ஒவ்வொரு குழந்தையும் ஆடம்பரத் திருமணங்களையே தனக்கான ஆதர்ஷமாக கொண்டு வளர்கிறது.
2000-ம் ஆண்டுக்கு பிறகு தான் பிரமாண்ட திருமண மண்டபங்கள் நகரங்களுக்கு வெளியே கட்டப்பட்டன. வி.ஐ.பி. வீட்டுத் திருமணங்களுக்கு நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்து நிற்கும் வசதி தேவைப்பட்டது என்பதால் நகரங்களுக்கு வெளியே பிரம்மாண்ட திருமண மண்டபங்கள் எழுந்தன! இன்னும் சில வி.ஐ.பி.க்கள் வெட்ட வெளியில் பிரமாண்டமான அலங்கார பந்தலை சில கோடி செலவில் சினிமா ஆர்ட் டைரக்டர்களை கொண்டு எழுப்பி திருமணங்களை நடத்தினர்.
2000-ம் ஆண்டுக்கு பிறகு திருமணங்களில் பேனர் வைப்பது என்பது ஒரு கலாசாரமாகவே மாறிவிட்டது. திருமணங்களில் புகைப்படங்கள், வீடியோ போன்றவைகளை சினிமா பாணியில் பல லட்சங்கள் செலவழித்து எடுக்கும் பழக்கமெல்லாம் வந்தது.
ஆடம்பர விருந்துகள்
கல்யாண விருந்துகளில் பத்து, பனிரெண்டு வகைகளில் பரிமாறுவதெல்லாம் பத்தாம் பசலித்தனமாக்கிவிட்டது. நாற்பது, ஐம்பது வகைகள் தொடங்கி 100 வகைகள் வரை சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. “பவ்வே” என்ற பெயரில் திரும்பும் திசையெல்லாம் வித, விதமான உணவுகளை நிறைத்து வைத்து, விரும்பியதை வேண்டிய அளவு எடுத்து சாப்பிடலாம் என்றும், அல்லது மிகப் பெரிய வாழை இலையில் சாப்பிட, சாப்பிட வைத்து திணற அடிப்பது என்ற வகையிலும் சாப்பிட்டது பாதி, வீணாவது மீதி என விருந்துகள் இன்று அரங்கேறிக் கொண்டுள்ளன.
இப்படியான திருமணங்களுக்கு ஒரு தட்டு அல்லது ஒரு இலை என்பதாக கேட்டரிங் செய்பவர் வாங்குகிறார். இதில் ஒரு இலைக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை செலவழிப்பவர்கள் நடுத்தர வர்க்கத்தில் சேர்த்தி! அடுத்து ரூ.350 முதல் ரூ.800 வரை செலவழிப்பவர்கள் ஹை மிடில் கிளாஸ் வர்க்கத்தில் சேர்த்தி! ரூ.800 முதல் ரூ.3,000 வரை செலவழிப்பவர்கள் கொழுத்த பணக்கார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஒரு தட்டுக்கு ரூ.2,800-க்கும் அதிகமாக செலவாகிறது.
அதேபோல 300 முதல் 500 வரையிலான எண்ணிக்கையில் விருந்தினர்களை அழைப்பவர்கள், 500 முதல் 2,000 வரை அழைப்பவர்கள், 2,000-க்கும் மேற்பட்டவர்களை அழைப்பவர்கள் என மூன்று விதமாக பிரிக்கலாம்.
மேக்கப்
தொழில் ரீதியானவர்களை அழைத்து மணமக்களுக்கு மேக்கப் செய்வது என்பது சுமார் 20 ஆண்டுகளாகத் தான் நடக்கிறது. முன்பெல்லாம் தோழிகளும், உறவுகளில் உள்ள பெண்களும் தான் மேக்கப் செய்வார்கள். திருமணங்களுக்கு மேக்கப் ஸ்பெஷலிஸ்ட்களுக்கு கட்டணமாக சில ஆயிரம் தொடங்கி சில லட்சங்கள் வரை வழங்கப்படுகிறது. இது தவிர கல்யாணத்திற்கு வரும் பெண்கள் யார் விரும்பினாலும் அவர்களுக்கு மெகந்தி வைத்துவிட ஒரு மேக்கப் குழுவே களத்தில் இறக்கப்படுகிறது.
கேளிக்கைகள்
கல்யாணத்திற்கு வரும் குழந்தைகள் மகிழ பஞ்சு மிட்டாய் கடை தொடங்கி பலூன் கடை, மேஜிக் ஷோ, மிமிக்ரி, டான்ஸ், பாட்டு கச்சேரி... என பல லட்சம் ரூபாய் செலவில் வருபவர்களை மகிழ்விக்கிறார்கள்! இது போன்ற கல்யாணங்களை நம்பியே பாட்டு கச்சேரி குழுவினர் உள்ளனர். ஆக, இப்படியெல்லாம் தங்கள் திருமண நிகழ்வை, விருந்தினர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக்கிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். சில கல்யாணத்தில் வருகின்ற விருந்தினர்களை ஓவியமாகத் தீட்டி அந்த ஸ்பாட்டிலேயே வழங்கி இன்ப அதிர்ச்சி தருகிறார்கள்!
சட்டம் இயற்றி தடுக்கும் முயற்சிகள்
இந்தியா மாதிரியான இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் 30 சதவிகித மக்கள் வாழும் நாட்டில் கல்யாணம் செய்ய வக்கின்றி, வழியின்றி கோடானுகோடி ஏழைப்பெண்கள் வாழும் நாட்டில், ஆடம்பரத் திருமணங்களை ஒரு சமூக குற்றமாக அல்லது பாவ செயலாக அறிவிக்க வேண்டும் என பலதரப்பிலும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து ஆடம்பரத் திருமணங்களை தடுக்கும் தனிநபர் மசோதா ஒன்று நமது பாராளுமன்றத்தில் 2017-ம் ஆண்டு ரஞ்சித் ரஞ்சன் என்ற உறுப்பினரால் கொண்டு வரப்பட்டது. அதனை உறுப்பினர்கள் பலர் வரவேற்று பேசினாலும் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதே போல கர்நாடகா சட்டமன்றத்திலும் ஆடம்பரத் திருமண சட்டம் ஒன்று கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரூ.5 லட்சத்திற்கு மேல் திருமண செலவு செய்பவர்கள் அதில் 10 சதவிகிதத்தை ஏழை பெண்கள் திருமணத்திற்கு வழங்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டது.